எதிர் பார்த்திருந்த பிரித்தானிய பொதுத் தேர்தல் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதா இல்லையா என்பது தொடர்பாக நடத்தப்பட்ட மக்கள் கருத்துக்கணிப்பில், பிரித்தானியா விலகுவது என்று பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தன.
இதன் அடிப்படையில் பிரதமர் டேவிட் கமரூன் தனது பதவியில் இருந்து விலகிக் கொண்டார். இதனையடுத்து தெரசா மே பதவி ஏற்றுக் கொண்டார்.
எனினும் பிரித்தானியா நாட்டில் வலிமை வாய்ந்த, நிலையான தலைமை தேவை என்று கூறி பாராளுமன்றத்துக்கு திடீர் தேர்தலை நடத்தப்போவதாக பிரதமர் தெரசா மே அறிவித்திருந்தார்.
இதன் அடிப்படையில், பிரதமர் தெரசா மே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், ஜெர்மி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது.
ஆரம்பத்தில் பிரித்தானிய ஊடகங்கள் மேற்கொண்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில், தெரசா மே வெற்றி பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
வாக்கெடுப்பு முடிவுகள் இலங்கை நேரப்படி 2.30மணிக்கு வெளிவரத் தொடங்கின.
எனினும் கருத்துக் கணிப்புக்களுக்கு மாறாக, தெரசா மே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஆரம்பத்தில் இருந்து வெற்றி வாய்ப்புக்கள் மிக குறைவாக இருந்து வந்தன.
ஆனால், சற்று நேரத்தில் இரண்டு கட்சிக்குமான வாக்குப் பதிவிற்கான வீதம் சரிசமமான நிலையில் வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில், தொங்கு பாராளுமன்றம் அமையக் கூடிய சாத்தியக் கூறுகள் அமைந்துவிடப் போவதாகவும், எந்தக் கட்சியும் பெரும்பான்மை ஆதரவினைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் மிக மிகக் குறைவு என்று எதிர்வு கூறப்பட்டது.
இறுதியில், அதுவே நிகழ்ந்தது, தெரசா மே 318 வெற்றியிடங்களைப் பெற்றுக்கொண்டார். இந்நிலையில் Conservative Party, Democratic Unionist Party உடன் இணைந்து ஆட்சி அமைப்பது என்று முடிவாகியிருக்கிறது. அதாவது, கூட்டாட்சி அமைகிறது பிரித்தானியாவில்.
மீண்டும் பிரித்தானியாவின் ஆட்சிப் பீடத்தில் இன்னொரு கட்சியின் ஆதரவோடு தெரசா மே அமரும் பொழுது அவர் முன்னிலையில் மிகப்பெரிய சவால்கள் காத்திருப்பதனை உணரமுடிகிறது.
முதல் பிரச்சினையே கூட்டாட்சியில் தான் தொடங்குகிறது. பெரும்பான்மையினைப் பெற்று Conservative Party ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கூட்டாட்சி என்பதில் திடமான, காத்திரமான முடிவுகளுக்கு இன்னொரு கட்சியின் கருத்துக்கள், கேட்கவேண்டிய நிலைக்கு திரசா மே தள்ளப்பட்டிருக்கிறார்.
இது சுயமான முடிவுகளுக்கும் பெரும் தடையாக அமையலாம். இதனை முன்னர் சற்றும் கூட திரசா மே எதிர்பார்த்திருக்கவில்ல.
அடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய விலகும் முடிவு அறிவிக்கப்பட்டதில் இருந்து அந்நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் தலைதூக்கியிருக்கிறது.
அந்நாட்டு நாணயம் அடிக்கடி சரிவினைச் சந்தித்துக் கொண்டிருப்பதனை அவதானிக்க முடிகிறது. நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றம் இதில் தாக்கம் செலுத்துகின்றது.
ஏனெனில், கூட்டாக இணைந்திருந்த நிலையில் திடீரென பிரித்தானியா தனித்து இயங்குவது குறித்து வெளியான முடிவுகளினால் தன்னுடைய பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் டேவிட் கமரூன். அதன் பின்னர் பிரித்தானியாவின் பொருளாதாரம் சற்று ஆட்டம் காணத் தொடங்கியிருந்தது.
அவ்வப்போது, பவுணின் பெறுமதியானது சரிவதும், குறைவதுமாக இருந்ததனால் நாட்டின் பொருளாதார சமநிலை கேள்விக்குறியாக இருந்தது.
அது மட்டுமல்லாது, பிரித்தானியாவில் வேலையில்லாப் பிரச்சினை தலை தூக்கியுள்ளதாகவும், இளைஞர்கள் பலர் வேலை வாய்ப்பினை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இது ஆட்சிப் பீடத்தை அலங்கரிக்கப் போகும் தெரேசா மேக்கு பெரும் தலையிடியாகவே அமையும் என்று கூறுகிறார்கள் சர்வதேச அரசியல் விமர்சகர்கள்.
பிரித்தானியாவிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே இப்பொழுது பெரும் சவாலாக இருப்பது தீவிரவாதத் தாக்குதல்கள் தான். இது பிரித்தானியாவை விட்டு வைக்கவில்லை. இந்த ஆண்டு மட்டும், பிரித்தானியாவில் மூன்று தாக்குதல் நிகழ்வுகள் இடம்பெற்று இருக்கின்றன.
அந்நாட்டு மக்களையும், முதலீட்டாளர்களையும் நிலைகுலையச் செய்திருக்கிறது தீவிரவாதிகளின் குண்டுத் தாக்குதல்கள். இது வெறும் தொடக்கம் தான் என்றும், தாக்குதல்கள் தொடரும் என்றும் ஐஎஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இது மிகப்பெரும் சவாலாக அமைந்திருக்கிறது பிரதமருக்கு. ஆட்சியினை கைப்பற்றுவதில் இருக்கம் சவாலைக் காட்டிலும் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதிலும், தாக்குதல்கள் நடைபெறாமல் தடுப்பதிலும், மக்களின் இயல்பு வாழ்க்கை கெடாமல் இருப்பதையும் பிரதமர் உறுதி செய்தாக வேண்டும்.
இதற்கு கடுமையாக உழைக்க வேண்டிய பொறுப்பினை பிரதமர் கொண்டிருக்க வேண்டும்.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, அமெரிக்க அரசியல் களமானது முற்றுமுழுவதுமாக மாறியிருக்கிறது.
முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு மாறாக, ஏன் அமெரிக்க ஜனாதிபதிகளில் வேறு எவரும் செயற்படாத விதத்தில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செயற்பட்டுவருகிறார்.
ட்ரம்ப்பின் வெளிநாட்டுக் கொள்கைகள் சற்று வித்தியாசமானதாக அமைந்திருக்கிறது.
எனவே இதன் காரணமாக அமெரிக்காவில் குடியேறியிருப்பவர்கள் பெரும் ஆபத்தினை எதிர் கொண்டிருக்கிறார்கள். எனவே இது பெரும் சவாலாக அமைந்துள்ள அரசியல் களமாக மாறியிருக்கிறது.
இந்தச் சவாலானது பிரித்தானியாவிற்கும் நேரடித் தாக்கத்தினை செலுத்துவதாக அமைந்திருக்கிறது.
அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையில் பிரித்தானியாவின் அடுத்த கட்ட நகர்வுகள் என்ன? எதை நோக்கி நகர வேண்டியிருக்கிறது? குடியேற்றவாசிகளை கையாளப்போகும் தன்மை.
வதிவி்டக் கோரிக்கைகளை கோரும் புலம்பெயர்வாளர்களின் வேண்டுகோள்களை எப்படிப் பயன்படுத்துவது?
புலம்பெயர்ந்தவர்களை வைத்து எப்படி பிரித்தானியாவின் வளர்ச்சியினை முன்னெடுப்பது என்று மிகப் பெரும் சவாலினை பிரதமராக பொறுப்பேற்கவுள்ள தெரசா மே சமாளிக்கப் போகின்றார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இன்னொருபுறத்தில் பிரதமர் தெரசா மேவின் வெற்றியானது ஈழத் தமிழர்களின் வாழ்வியலில் மாற்றத்தைக் கொண்டுவருமா? என்னு புலம்பெயர் தமிழர்கள் எதிர் பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தவர்களில் பெருமளவிலானவர்கள் பிரித்தானியாவில் குடியேறியிருக்கிறார்கள்.
இப்பொழுது, அவர்கள் பிரித்தானியப் பிரஜைகள். அவர்களின் தேவையும் பிரித்தானியாவிற்கு உண்டு. எனினும், புலம்பெயர் இலங்கைத் தமிழர்களை பிரித்தானியப் பிரதமர் எவ்வாறு கையாளப் போகின்றார்?
இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்து அவரின் பார்வை என்ன என்பதை அவர் எப்படி வெளிப்படுத்துவார் என்பதை அவரின் நகர்வுகள் வெளிப்படுத்தும்.
ஆனாலும், தெரசா மேயுடனான நெருக்கத்தை இலங்கை அரசாங்கம் நிச்சயமாக பேணும். சர்வதேச அரசியலை இலங்கை அரசாங்கம் சரியான முறையில் பயன்படுத்துகிறது.
இதில் தெரசா மே இலங்கை விடையத்தை எவ்வாறு அணுகப்போகிறார்? அவரின் ஆசியா நோக்கிய பார்வை எப்படி அமையும் என்பதெல்லாம் அவருக்கான சவால்கள் தான்.
இலங்கை விடையத்தில் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் மாதிரி ஜொலிப்பாரா? காலம் பதில் சொல்லும்.