கடந்த மே மாதம் முள்ளிவாய்க்கால் நினைவுதினமொன்றை ஏற்பாடு செய்திருந்தமை குறித்து அருட்தந்தை எழில் ராஜேந்திரன் பொலிசாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தார்.
அத்துடன் இன்றளவும் தமக்கு பாதுகாப்புத் தரப்பினரால் தொல்லை கொடுக்கப்படுவதாக அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனை தீவிரமாக அலசி ஆராய்ந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இருந்து உயிரிழந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவதிலிருந்து அவரது உறவினர்களைத் தடுக்க முடியாது என்று வலியுறுத்தியுள்ளது.
மரணித்த ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவது பொதுவான நிகழ்வாகும் . அவ்வாறான நிகழ்வொன்றைத் தடுக்காது அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமாக மட்டுமே இலங்கைப் பிரசைகள் அனைவரும் தாம் சமமாக நடத்தப்படுவதாக உணர முடியும்.
எனவே விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் தொடர்பான அஞ்சலி நிகழ்வுகளைத் தடுப்பதற்குப் பதில் அதனை நடத்துவதற்கான வசதிகளையும், அதற்கான ஏற்பாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் தேசிய நல்லிணக்க அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் பொறுப்பாகும் என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளது.
இதன் மூலம் எதிர்வரும் காலங்களில் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் மற்றும் மாவீரர் வாரம் போன்றவற்றை தடையின்றி அனுஷ்டிப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.