கடந்த வாரம் புகழ்பெற்ற லண்டன் பாலத்தில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ஏழரை டன் கனரக வாகனத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டதாக தெரியவந்துள்ளது.
தாக்குதல் நடத்த தயார் நிலையில் இருந்த வாகனத்திற்கு வாடகை பணம் செலுத்தியுள்ளதாக லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கனரக வாகனத்தை கொண்டு வருவதற்கு கட்டணம் செலுத்தியமைக்கான பற்றுச்சீட்டை கொடுக்க தவறியதால் சிறிய வேன் ஒன்றை பயன்படுத்த நேரிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லண்டன் பாலத்தில் பாதசாரிகள் மீது வாகனத்தை கொண்டு மோதிய நபர்கள், வாகனத்திலிருந்து வெளியேறி பொது மக்களை கத்தியால் குத்தி கொன்றனர்.
30 சென்டிமீட்டர் அளவுடைய கத்திகளை தாக்குதல்காரர்கள் அவர்களின் கைகளில் கட்டியிருந்தனர். அத்துடன் வேனில் பெட்ரோல் குண்டுகளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த மூன்றாம் திகதி அதிகாலை இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாக 8 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 48 பேர் வரையில் காயமடைந்தனர்.
Khuram Shazad Butt, Rachid Redouan மற்றும் Youssef Zaghba என அடையாளம் காணப்பட்ட மூன்று பயங்கரவாதிகளும் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
27 வயது நபர் ஒருவர் அந்தத் தாக்குதல் தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே தீவிரவாதிகள் இரண்டு மணிநேரமாக அங்கேயே சுற்றி திரிந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.