போபால் நகரிலுள்ள தசரா மைதானத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு இன்று மேற்படி உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மாநிலத்தின் ஏனைய அமைச்சர்களும் ஆளும் சட்டமன்ற உறுப்பினர்களும் இணைந்துள்ளனர்.
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் விவசாயிகள் நடத்திவரும் தொடர் போராட்டம் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியுள்ள நிலையில், போராட்டத்தை கைவிட்டு அமைதி வழிக்கு திரும்பக் கோரி அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ்சிங் சவுகான்காலவரையறையற்ற உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.
வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த முதலாம் திகதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் மந்த்சார் மாவட்டம் பிபாலியமண்டியில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 5 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேற்படி வன்முறைச் சம்பவத்தை தொடர்ந்து, மந்த்சார் பகுதியில் பதற்றம் நீடிக்கின்றது. குறித்த பகுதியில், ஏராளமான பொலிஸாரும் அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விவசாயிகளின் உயிரிழப்புக்களுக்கு நீதி கோரி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.