நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் கடும் போட்டி நிலவியது.
மொத்தம் உள்ள 650 இடங்களில் கன்சர்வேட்டிவ் கட்சி 318 இடங்களிலும், தொழிலாளர் கட்சி 262 இடங்களிலும் வென்றது. ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை பலம் எந்தக் கட்சிக்கும் கிடைக்காததால், வடக்கு அயர்லாந்தின் டியுபி கட்சியுடன் கூட்டணி அமைத்து கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியமைக்க உள்ளது.
கன்சர்வேட்டிவ் கட்சியும் வடக்கு அயர்லாந்தின் டியுபி கட்சியும் அமையும் கூட்டாட்சியில் தெரேசா மே மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமரின் முக்கிய ஆலோசகர்களாக இருந்த திமோதி மற்றும் ஹில் ஆகியோர் இன்று தங்கள் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.
தேர்தலில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையளித்த நிலையில் அவர்களால் வெற்றி பெறமுடியவில்லை. இந்நிலையில் இதற்கு தாங்கள் பொறுப்பேற்று பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்தத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு பின்னடைவு ஏற்படுவதற்கான மிக முக்கியமான காரணமாக தேர்தல் அறிக்கை தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், இந்த தேர்தல் அறிக்கை பணியில் ஈடுபட்டிருந்த அத்தனை பேரும் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் தான் ஆலோசகர்கள் இருவரும் பதவியில் இருந்து விலகியுள்ளனர்.
தெரேசா மேயின் முக்கியமான பணிகளின் போதும், நெருக்கடி நிலமைகளின் போது கூட இந்த இரு ஆலோசகர்களும் உடனிருந்து செயற்பட்டவர்கள் என்றும், அவருக்கான வழிகாட்டல்களில் இவர்களின் பங்கு இருந்திருக்கிறது என்றும் குறிப்பிடும் சர்வதேச ஊடகங்கள். இவர்கள் பதவி விலகிக் கொண்டமை தெரேசா மேயிக்கு நெருக்கடியானதாக அமையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பதவி விலகியுள்ள இரு ஆலோசகர்களும் கருத்து வெளியிடும் பொழுது, பிரதமர் தெரசா மே மிகச்சிறந்த பிரதமர் என்றும் அவர் பிரதமராக தொடர்ந்து சேவை செய்வார் என்று குறிப்பிட்டுள்ளனர்.