ஆபத்தான வலயத்திற்குள் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் சிக்கியிருந்தாக லண்டன் தகவலின் அடிப்படையில் கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த மூன்றாம் திகதி இரவு 11 மணியளவில் தாக்குல் நடத்தப்பட்டிருந்தது. இதன்போது இரவு போசனத்திற்காக இலங்கை அணி வீரர்கள் லண்டன் நகரில் உலாவியதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் தாக்குதல் தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் விரைந்து செயற்பட்ட இலங்கை கிரிக்கெட் நிர்வாகம், வீரர்களை உடனடியாக ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஹோட்டல்களில் வெளிநாட்டு உணவினை பெற்றுக்கொள்ள விரும்பாத வீரர்கள் லண்டன் நகரில் உள்ள உணவகங்களில் தமக்கு தேவையான உணவை பெற்றுக்கொண்டுள்ளனர்.
எனினும் பயங்கரவாத தாக்குதலை அடுத்து வீரர்கள் வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் இடம்பெற்ற அன்று இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அன்றையதினம் இரவு 10 முதல் 11 மணிக்கு இடையிலான காலப்பகுதியினுள் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் இடம்பெற்ற லண்டன் பாலத்திற்கும் இலங்கை வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கும் இடையில் ஒரு கிலோ மீற்றர் அளவிலான தூரமே காணப்பட்டுள்ளது. எனினும் எந்தவித பாதிப்பும் இன்றி கிரிக்கெட் வீரர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
லண்டன் பயங்கரவாத தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதுடன், 48 பேர் காயமடைந்திருந்தனர்.
இதேவேளை கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்தானில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பலர் காயமடைந்திருந்தனர்.
இந்த தாக்குதலில் இலங்கை கிரிக்கெட் அணியினரும் சிக்கியிருந்தனர். அந்த நேரத்தில் இலங்கை வீரர்களின் பஸ் வண்டிக்கு மாத்திரமே பாதுகாப்பு கிடைத்துள்ளது. எனினும் பாதுகாப்பாக வீரர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.