“நிலைபேறான அபிவிருத்தியை உறுதிப்படுத்த சுற்றாடலை பாதுகாக்க வேண்டும்” என்ற தலைப்பில் உலக வங்கி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வறுமையானது தொடர்ச்சியாக காணப்படும் சுற்றாடல் பிரச்சனைகளில் ஒன்றாக இலங்கையில் இருந்துவருகின்றது.
உதாரணமாக நோக்குமிடத்து வாழ்வாதாரத்தைதேடிச் செல்கின்ற மக்கள் அடிக்கடி காடுகளுக்கு உரித்தான நிலப்பகுதியை அத்துமீறிக் கையகப்படுத்திக்கொள்வதுண்டு.
இலங்கையின் ஒட்டு மொத்தநிலப்பகுதியில் 19ம் நூற்றாண்டின் ஆரம்பகாலப்பகுதியில் 70 வீதமாக பரவிக்கிடந்த காடுகள், தற்போதோ குறைவடைந்து 29.7 வீதமாக மாத்திரம் காணப்படுகின்றது என வன இலாகா திணைக்களம் மதிப்பீடொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
காடுகளை அழிப்பதும் திட்டமிடப்படாத அபிவிருத்தியும் வெள்ள அனர்த்தத்தின் கனதியை அதிகரிப்பதில் முக்கியமான தாக்கத்தை உண்டுபண்ணுகின்றபோதும், அதிகரிக்கும் சனத்தொகை, விவசாயப் பாவனைக்காக மேலும் அதிகமான நிலப்பகுதியை மாற்றியமைத்தல் மற்றும் துரிதமான நகரமயமாக்கல் போன்ற விடயங்களும் இதற்கான மேலும் காரணங்களாக அமைந்துள்ளன.
இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் தாக்கங்களின் அளவைக் குறைக்கவும் அபிவிருத்தித் திட்டங்களின் உச்சபட்ச பலாபலனைப் பெற்றுக்கொள்ளவும், அபிவிருத்தி நடைமுறைகளுக்கான சுற்றாடலியல் திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதனுடன் கூடியதாக நிலவமைப்பு முகாமைத்துவம் தொடர்பான முழுமையான புரிந்துணர்வு அவசியமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.