பிரித்தானியாவில் கடந்த 8-ம் திகதி நடைபெற்ற பொது தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியினர் அறுதிப்பெரும்பான்மையை இழந்தனர்.
2015-ம் ஆண்டில் கமெரூன் பிரதமராக தெரிவானபோது 330 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தனர்.
ஆனால், தெரேசா மே தலைமையில் நடைபெற்ற இந்த தேர்தலில் ஏற்கனவே கையில் இருந்த 12 தொகுதிகளில் தோல்வி அடைந்தது மட்டுமில்லாமல் அறுதிப் பெரும்பான்மையையும் இழந்துள்ளனர்.
முக்கிய எதிர்கட்சியான தொழிலாளர் கட்சியினர் ஏற்கனவே கையில் இருந்த தொகுதிகளை விட கூடுதலாக 32 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.
தெரேசா மேயின் இந்த பின்னடைவிற்கு அவரே பொறுப்பேற்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. தெரேசா மே பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், தெரேசா மேயின் சொந்தக் கட்சி உறுப்பினர்களும் அவர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த இணையத்தளம் நடத்திய கருத்துக்கணிப்பில் சுமார் 65 சதவிகித கட்சி உறுப்பினர்கள் தெரேசா மே ராஜினாமா செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.
மேலும், அடுத்த வாரம் பாராளுமன்றம் கூடும்போது தெரேசா மே மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
15 சதவிகித பாராளுமன்ற உறுப்பினர்கள். அதாவது 48 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து கோரிக்கை விடுத்தால் தெரேசா மே மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரலாம்.
இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தெரேசா மே தோல்வி அடைந்தால் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.