இறுதி இரத்தத் துளி சிந்தும்வரை போராடுவோம்’ எனும் முகப்பு வாசகத்தைப் பதித்துக் கொண்டு கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்றும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டம் தற்போது 5வது நாளாக தொடர்துகின்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், ‘கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை சரியான நேரத்தில் நிறைவு செய்’, ‘பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரீ.வி.கமராக்களை அகற்று’, ‘மஹாபொல புலமைப் பரிசில் பிரச்சினையை உடனே நிவர்த்தி செய்’, ‘விடுதிப் பிரச்சினையை உடனடியாக நிவர்த்தி செய்’, ‘அசாதாரணமான வகுப்புத் தடையை நீக்கு’ என்பன உள்ளிட்ட ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவன் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், “கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நான்கு வருடங்களில் நிறைவு செய்யவேண்டிய பட்டப்படிப்பு ஆறு வருடங்களில் நிறைவடைவதால் இரண்டு ஆண்டுகள் மேலதிகமாக வீணாக்கப்படுகின்றன. உரிய நேரத்தில் பரீட்சைகள் நடைபெற்று பெறுபேறுகளை வெளியிடுவதன் மூலம் நான்கு வருடங்களில் பட்டப்படிப்பினை மாணவர்கள் பூர்த்தி செய்ய முடியும்.
சி.சி.ரீ.வி.கமராக்கள் மூலம் மாணவர்கள் அவதானிக்கப்படுவதனால் எமக்குப் போதுமான சுதந்திரம் இல்லை. அத்துடன் மாணவர்கள் நியாயமற்ற முறையில் இடைநிறுத்தப்படுகிறார்கள். மாணவர்களை பழிவாங்கும் நடவடிக்கைளை நிர்வாகம் நிறுத்த வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.