நல்லாட்சியிலும் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்த வன்முறைச் சம்பவங்களை நிறுத்துவதாக இருந்தால் வன்முறைச்சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் குற்றவாளிகளுக்கு அதிகப்பட்ச தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனப் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மூதூர் மல்லிகைத்தீவுக் கிராமத்தில் மூன்று சிறுமிகள் மீது மேற்கொள்ப்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது,
“குற்றவாளிகளுக்கு இவ்வாறு அதிகபட்ச தண்டனை வழங்கினால் இந்த நாட்டின் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் குறையும். சமீப காலங்களில் நடைபெறும் குற்றங்களை கண்டித்து பலதரப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மக்களாலும் மக்கள் பிரதிநிதிகளாலும் தொடர்ந்தும் நடைபெற்ற வண்ணமே உள்ளன. இருந்தும் கடந்த அரசு காலத்தில் நடைபெற்றது போன்று தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திலும் இது போன்ற குற்றங்களுக்கு தண்டனை வழங்குவது தாமதமடைந்தே காணப்படுகின்றது.
இந் நடவடிக்கை ஆனது தொடர்ந்தும் குற்றங்கள் நடைபெறுவதற்கு வழிவகுக்கும் ஒரு காரணியாக காணப்படுகின்றது. குற்றங்கள் நடைபெற்றால் காவல்து றையினர் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தின் மூலம் விசாரணைகள் துரிதமாக நடாத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் பட்சத்தில் இனிவரும் காலங்களில் குற்றம் செய்பவருக்கோ அல்லது குற்றம் ஒன்றினை செய்ய நினைப்பவருக்கோ வழங்கப்படும் அதிகபட்ச தண்டனைகள் ஒரு பாடமாக அமைவதோடு, இனிவரும்காலங்களில் குற்றங்களை குறைக்கவும் தடுக்கவும் முடியும்.
மூதூர் மல்லிகைத்தீவுக் கிராமத்தில் மூன்று சிறுமிகள் மீது மேற்கொள்ப்பட்ட வன்முறைச் சம்பவமானது வேதனையளிக்கின்றது. இச் சம்பவத்தின் சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தி குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அதிகபட்சத் தண்டனை வழங்கப்பட வேண்டும்.” என்றார்.