பயங்கரவாதத்துக்கு கத்தார் நாடு துணை போவதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக தங்களின் தூதரக உறவுகளை அமீரகம், சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, ஏமன், ஜோர்டான், லிபியா உள்ளிட்ட நாடுகள் துண்டித்துள்ளன.
இவற்றில் அமீரகம், சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் கத்தார் செல்வதற்கான அனைத்து வழி போக்குவரத்தையும் மூடியுள்ளன.
குறிப்பாக கத்தார் நாட்டுடனான அனைத்து விமான போக்குவரத்து சேவைகளும் அடியோடு நிறுத்தப்பட்டு விட்டது. மேலும் அந்நாட்டு விமானங்கள் தங்கள் நாட்டு வான்பரப்பை பயன்படுத்திக்கொள்வதையும் தடை செய்துள்ளன.
இதன் காரணமாக கத்தார் வழியே செல்லும் விமான பயணிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். இந்த விவகாரத்தை சுமூகமாக தீர்த்து வைக்க குவைத் மற்றும் துருக்கி முயற்சித்து வருகின்றது.
இதனிடையே ரம்ஜான் காலத்தில் திடீரென இப்படி புறக்கணிப்புக்கு உள்ளானதால், கத்தார் நாட்டில் உணவுப்பொருட்களுக்கு சிறிது தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனையடுத்து, கத்தார் நாட்டுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் பாதுகாப்பு உதவிகள் வழங்க தயாராக இருப்பதாக ஈரான், துருக்கி ஆகிய நாடுகள் அறிவித்தன.
இந்நிலையில், கத்தார் நாட்டுக்கு ஐந்து விமானங்கள் மற்றும் மூன்று கப்பல்களில் சுமார் 440 டன் எடையிலான காய்கறிகள் மற்றும் பழங்களை மனிதநேய அடிப்படையில் ஈரான் அனுப்பியுள்ளது. கத்தாரில் உணவு தட்டுப்பாடு நீங்கும் வரை உணவுப்பொருட்கள் தொடர்ந்து அனுப்பப்படும் எனவும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
மேலும், ஈரான் அரசு தனது வான்வெளித்தளம் வழியாக தினமும் 100 கத்தார் விமானங்கள் பறக்க தொடர்ந்து அனுமதியளிக்கும் எனவும் ஈரான் விமானப்படை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.