சிறுவர்கள் தொடர்பாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு ஊடகங்களில் வெளியாகிய தகவல்கள் அதிர்ச்சி மிக்க தகவல்களாக காணப்படுகின்றன.
அதாவது நாட்டில் 51 ஆயிரத்து 249 சிறுவர்கள் ஒரு நாளேனும் பாடசாலைக்கு செல்லவில்லை என்ற அதிர்ச்சியான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது பாடசாலைக்குச் செல்ல வேண்டிய 05-17 க்கும் இடைப்பட்ட வயதுகளைச் சேர்ந்தவர்களில் 4 இலட்சத்து 52 ஆயிரத்து 661 பேர் பாடசாலைகளுக்குச்செல்வதில்லை.
இதில் 51 ஆயிரத்து 249 பேர் ஒரு நாளேனும் பாடசாலைகளுக்குச் சென்றதில்லையென அரசாங்க தரப்பைச் சேர்ந்த பல பிரிவுகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளது.
அதாவது தொழில் மற்றும் தொழிலுறவுகள் அமைச்சின் கோரிக்கைக்கு அமைவாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத்திணைக்களம் மற்றும் தேசிய பொருளாதார நடவடிக்கை அமைச்சு வெளியிட்டுள்ள சிறுவர் செயற்பாட்டு ஆய்வு – 2016 அறிக்கையிலேயே மேற்கண்ட விரபம் வெளியாகியுள்ளது.
இந்த ஆய்வு முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் 2016ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாய்விற்காக பிள்ளைகளின் சமூக விஞ்ஞானத்தகவல், பாடசாலைக்கல்வி, பொருளாதார செயற்பாடு, சுகாதாரம், பாதுகாப்பு பெற்றோர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல் பல்வேறான தொழில்கள் மற்றும் தொழில் வழங்குபவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட இந்த ஆய்வறிக்கையின் படி நாட்டின் மக்கள் தொகையின் நூற்றுக்கு 4.6 சதவீதமான 45இலட்சத்து 71ஆயிரத்து 442 பேர் தொடர்பிலேயே ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் 5-17 வயதிற்குட்பட்ட 90.1 வீதமானோர் மட்டுமே, அதாவது 41 இலட்சத்து 18 ஆயிரத்து 741 பேர் மட்டும் பாடசாலைகளுக்கு செல்கின்றனர். 9.9 வீதமானவர்கள் பாடசாலைக்குச்செல்வதில்லை.
அதாவது 4 இலட்சத்து 52 ஆயிரத்து 661 பேர் பாடாசலைகளுக்குச் செல்வதில்லை. இதில் 1.12 சதவீதமானோர் அதாவது 51ஆயிரத்து 249 பேர் ஒரு நாளேனும் பாடசாலைக்குச் செல்லவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது லயன் குடியிருப்புக்களில் வாழும் அதனை அண்மித்த பிரதேங்களில் சேரிகளில் வாழ்வோர் மற்றும் யுத்தத்திற்கு முகங்கொடுத்த பிரதேசங்களைச் சேர்ந்த சிறார்களுக்கு கல்வியைப்பெற்றுக்கொடுப்பதற்கான அக்கறையை பெற்றோர்கள் செலுத்தாமை போன்ற குறைபாடுகளால் இவ்வாறு சிறுவர்கள் கல்வியை இழந்த நிலையில் காணப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வன்னிப்பகுதியில் சிறுவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில் காணப்படுகின்றது.
சிறுவர்களின் அபிவிருத்தி, போசாக்கு மற்றும் வாழ்வாதாரம் போன்ற செயற்திட்டங்களுக்காக மத்திய மாகாண அரசுகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் அதிகளவான நிதிகள் செலவிடப்படுகின்றபோதும் சிறுவர் அபிவிருத்தி என்பது கேள்விக்குறியானதொன்றாகவே காணப்படுகின்றது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற தொடர் யுத்தம் இடப்பெயர்வுகள் காரணமாக அதிகளவான சிறுவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
குறிப்பாக யுத்தகாலத்தில் அதிகளவான சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன் அங்கீனவர்களாக்கப்பட்டுள்ளனர்.
இதனைவிட அதிகளவான குடும்கள் யுத்தத்தின் காரணமாக உழைப்பாளர்களை இழந்தும், வாழ்வாதார வசதிகளற்ற நிலையிலும் வாழ்வதனால் அந்தக்குடும்பங்களினுடைய வாழ்க்கைச்சுமையை சிறுவர்கள் சுமக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது.
இதனால் இவர்களது கல்வி, போசாக்கு போன்ற விடயங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன. குறிப்பாக பாடசாலை கல்வியை விட்டு தொழில் வாய்ப்புக்களைத் தேடிச்செல்கின்ற சிறுவர்களின் உழைப்புக்கள் குறைந்த வேதனத்துடன் உறிஞ்சப்படுகின்றன.
இதனைவிட இவ்வாறான சிறுவர்கள் சட்டவிரோதச் செயற்பாடுகளுக்கும் போதைப்பொருள் விற்பனைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றனர்.
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழுகின்ற சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாடசாலைக்குச்செல்லாத நிலை காணப்படுகின்றது.
குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் குறைந்தளவு வேதனங்கள் வழங்கப்பட்டு சட்டவிரோத மணல் அகழ்வுகள் மரக்கடத்தல்களுக்கு சிறுவர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதனைவிட சட்டவிரோதமான கசிப்பு உற்பத்தி விற்பனைகளும் சிறுவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். சிறுவர்கள் தங்களது எதிர்காலத்தை கருத்திற்கொள்ளாது உடனடியான பணத்தேவையென்பதற்காக தங்களது எதிர்காலத்தை கருத்திற்கொள்ளாது இவ்வாறான செயல்களுக்குள் செல்கின்றனர்.
குடும்ப வறுமை வாழ்வாதாரத்தொழில் இன்மை பின்தங்கிய பிரதேசங்களுக்கான போக்குவரத்து வசதி இன்மை போன்ற பல்வேறு காரணங்களால் சிறார்கள் பாடசாலை கல்வியை இடைநிறுத்துகின்றனர்.
வன்னியின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் சிறுவர் தொழிலாளர்களாக பயபன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் சிறுவர்கள் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். இதனால் கூடுதலான சிறுவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகின்றது.
கடந்த ஆண்டில் வடமாகாணத்தில் சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்பாக இரண்டாயிரத்து 211 வழக்குகள் பதிவு செய்யப்படடுள்ளதாக வடமாகாண சிறுவர் திணைக்களப்பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.
அதாவது வடமாகாணத்திலுள்ள ஒன்பது நீதிமன்றங்களில் 2016ம் ஆண்டில் இரண்டாயிரத்து 211 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் யாழ். மாவட்டத்தில் ஆயிரத்து 116 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வவுனியா நீதிமன்றத்தில் 493 வழக்குகளும், மன்னார் நீதிமன்றத்தில் 393 வழக்குகளும், கிளிநொச்சி நீதிமன்றத்தில் 89 வழக்குகளும், முல்லைத்தீவு நீதிமன்றத்தில் 120 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ள துஸ்பிரயோகங்கள் தவிர சட்டத்தின் முன் நிறுத்தப்படாத அதிகளவான துஸ்பிரயோகங்கள் காணப்படுகின்றன.
குறிப்பாக இளவயதுத் திருமணங்கள், சிறுவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இவ்வாறு சிறுவர்கள் தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் அனைவரிடத்திலும் உள்ளது.