காணாமல்போனோர் தொடர்பில் உள்நாட்டு விசாரணை பொறிமுறையூடாக விசாரணை நடாத்தப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசியலமைப்பில் வெளிநாட்டு நீதிபதிகளை இணைத்துக்கொண்டு விசாரணை நடாத்துவதற்கு இடமில்லை. இதனை சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், இவ்வாண்டுக்குள் பண வீக்கத்தையும், வாழ்க்கைச் செலவையும் கட்டுப்படுத்த அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
சமகாலத்தில் பணவீக்கமும், வாழ்க்கைச் செலவும் ஓரளவு அதிகரித்துள்ளமை உண்மையே. இருந்தபோதிலும், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக இவ்வாண்டுக்குள் அவை குறையும்.
மே மாதத்திற்குள் மீண்டும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைக்கும். அரசாங்கம் முதலீடுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக நாட்டில் கணிசமான பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.