வடமாகாண அமைச்சர்கள் இருவர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் வடமாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராஜாவும் ஒருவர். இதன் காரணமாகவே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் குறித்த இராஜினாமா கடிதத்தை மாவை சேனாதிராஜா ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகின்றது.
குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்களின் இணக்கப்பாடு கிடைக்கப் பெறாமையால், பொருமையை கடைப்பிடிக்கும் படி குருகுலராஜாவிடம் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால் குருகுலராஜாவின் கட்டாயத்தின் பேரில் அந்த இராஜினாமா கடிதத்தை மாவை பெற்றுக் கொண்டுள்ளதாகவும், அது உத்தியோகபூர்வமான நடவடிக்கை அல்ல எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் கூறியுள்ளார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த ஊழல் குற்றச்சாடுகள் தொடர்பில் ஆராய முதலமைச்சரால் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.
அந்த குழுவின் அறிக்கை தொடர்பில் எதிர்வரும் 14ஆம் திகதி விவாதம் ஒன்று இடம்பெறும் என முதல்வரால் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே, வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, தமது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் கையளித்துள்ளார்.
இராஜினாமா கடிதத்தை, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் வழங்கியது நகைப்புக்குரியது எனவும், மாகாண சபை உறுப்பினர் ஒருவர் இதுபோன்ற இராஜினாமா கடிதங்களை முதலமைச்சர் அல்லது சபை முன்னிலையிலேயே சமர்ப்பிக்க வேண்டும் எனவும் வட மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.