காணாமல்போனவர்களின் உறவினர்களை மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்தில் சந்திக்க உள்ளார்.இச்சந்தர்ப்பத்தில் தொடர் போராட்டம் நடத்தி வரும் எமது உறவுகளுக்கு சற்றேனும் ஆறுதலைக் கொடுக்கும் எனலாம்.
பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோர், அவர்களின் குடும்பத்தினர் தமது துயருக்கு முடிவு கட்டும் வகையில் அன்னாகாரம் இன்றி தங்கள் அத்தனை வேலைகளையும் புறந்தள்ளி தொடர் போராட்டம் நடத்தி வரும் போது,அதுபற்றி ஏன்? என்று கேட்கவில்லையாயின் அதுவே மிகப்பெரும் துன்பமாக மாறும்.
அந்த வகையில் இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள்; காணாமல் போனவர்களின் உறவினர்களை இன்று யாழ்ப்பாணத்தில் சந்திப்பது ஒரு முக்கியமான நிகழ்வு.
அதேவேளை இந்தச் சந்திப்பில் தங்கள் பிள்ளைகளை நினைந்துருகும் பெற்றோரின் கண்ணீருக்கு முடிவு கட்ட வேண்டும்.
முன்னைய ஆட்சிக்காலத்தில் நடந்த சந்திப்புப் போல அமையாது இந்தச் சந்திப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக அமைவது கட்டாயமானதாகும்.
காணாமல்போனவர்களின் உறவுகள் கண்ணீரும் கம்பலையுமாக அலைந்து திரியும் போது ஆட்சியாளர்கள் சிலரும் பேரினவாத அரசியல்வாதிகளும் கூறிய கருத்துக்கள் மனிதநேய மற்றவை.அவர்கள் கூறிய கருத்துக்கள் பாதிக்கப்பட்ட வர்களின் இதயங்களை கருகச் செய்தன.
காணாமல்போனவர்கள் வெளிநாடு சென்றிருக்கலாம் அல்லது அவர்களை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றிருக்கலாம் என்ற அறிவிப்புக்கள் எரிகின்ற நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுவதாகவே இருந்தன.
காணாமல்போனவர்கள் இறந்து விட்டனர் என்றால் அவர்களின் உடல்கள் எங்கே? கொன்றது யார்?பாதுகாப்பார் என்று நினைத்து ஒப்படைத்தோமே பாதுகாக்க வேண்டியவர்களே கொன்று விட்டனர் என்றால் அவர்களுக்கான தண்டனை என்ன? என்ற கேள்விகள் எல்லாம் எழுமல்லவா?
ஆகவே ஒரு நல்ல முடிவை ஜனாதிபதி தர வேண்டும். இந்த முடிவு கண்ணீரும் கம்பலையுமாக அலையும் எங்கள் உறவுகளின் துன்பத்துக்கு முடிவு கட்டுவதாக இருக்கட்டும்.