மிகவும் மட்டமான களத்தடுப்பு காரணமாகவே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அரையிறுதி வாய்ப்பை தவற விட்டதாக இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் விளக்கமளித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்களோ அவர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவர் என்ற சூழ்நிலை நிலவியதால் இரு நாட்டு ரசிகர்களுக்கிடையே பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இதையடுத்து, இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, 236 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் 237 என்ற இலக்கை பாகிஸ்தான் தட்டுத்தடுமாறி கடந்தது.
இலங்கையின் இந்தத் தோல்விக்கு முக்கிய காரணமாக பலரால் சொல்லப்பட்டது, அவர்களின் களத்தடுப்பு முறைதான். கிட்டத்தட்ட மூன்று சுலபமான பிடிகளை விட்டு, பாகிஸ்தான் அணி வீரர்கள் தொடர்ந்து விளையாட வழிகோலியதே கடைசியில் இலங்கை அணியின் தோல்விக்கு வித்திட்டது.
இந்த சூழ்நிலையில்தான் இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ், ‘இன்று நடந்த போட்டியை திரும்பிப் பார்க்கும்போது, மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம் என்பது தெரிகிறது.
அதுவும் எங்கள் களத்தடுப்பு மிகவும் மட்டமானதாக இருந்தது. நாங்கள் மட்டும் எங்களுக்கு வந்த பிடிகளை எடுத்திருந்தால், இன்று வேறொரு கதையைப் பற்றி பேசியிருப்போம்.
ஆனால், ஆட்டத்தின் முக்கியமான நேரங்களில் பிடிகளை நாங்கள் தொடர்ச்சியாக நழுவவிட்டோம்.’ என்று வருத்தமாக பேசியுள்ளார்.