சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.
கார்டிஃப் சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதையடுத்து, களமிறங்கிய இலங்கை அணி 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ஓட்டங்களை எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் டிக்வெல்லா 73 (86) ஓட்டங்களும், மேத்யூஸ் 39 (54) ஓட்டங்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் சார்பில் ஜுனைத் கான், ஹாசன் அலி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
237 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களமிங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அஸார் அலி – பஃகார் சமான் களமிறங்கினர்.
முதல் விக்கெட்டுக்கு 74 ஓட்டங்களை சேர்த்திருந்த போது பஃகார் 50 (36) எடுத்து ஆட்டமிழந்தார். அஸார் அலி 34 (50) ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க அணியின் ஸ்கோர் வேகம் குறையத் தொடங்கியது.
இந்நிலையில், மலிங்கா வீசிய பந்தில் சர்பராஸ் இருமுறை கேட்சு கொடுத்தார். ஆனால் அந்த இரு வாய்ப்புகளையும் இலங்கை அணி வீரர்கள் கோட்டை விட்டனர்.
அந்த அதிர்ஷ்டம் ஒரு பக்கம் இருக்க, பொறுப்புடன் விளையாடிய அணித்தலைவர் சர்பராஸ் அகமது அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார்.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சர்பராஸ் 61 (79) ஓட்டங்களும் அமீர் 28 (43) ஓட்டங்களும் எடுத்தனர். இதையடுத்து 44.5 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டி இலங்கையை வெளியேற்றி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.