விடுதலை போராட்ட வரலாற்று காலத்தின் அடையாலம். தமிழீழ விடுதலை புலிகளின் கட்டமைப்பில் பல பிரிவுகள் இருந்தன. அந்த பிரிவுகள் தமது கடமைகளை இறுதிவரை செய்திருக்கின்றார்கள். அவர்களின் தியாகங்களையும், அர்ப்பணிப்புக்களையும்,கூறிட வார்த்தைகள் இல்லை .
தமிழீழ விடுதலை புலிகளின் ஒட்டுமொத்த செயற்பாடுகளை செய்யவில்லை என தொடர்ந்து நீங்கள் கூறிவருகின்றீர்கள். நீங்கள் தனிமனிதனக செயற்பட்டீர்கள் என்பதும் தமிழீழ விடுதலை புலிகளின் கட்டமைப்பின் பிரிவுகள் தமது செயற்பாடுகளை செய்யவில்லை என நீங்கள் கூறிவருவது ஒரு வேதனை தரும் விடயம். ஒரு வரலாற்றை மாற்றிட அல்லது அதனை மறைத்திட உங்கள் சுய நலனுக்காக விடயங்களை திரிவுபடுத்தி கூறுதல் பொருத்தமற்றது.
91-92 காலப்பகுதிகளில் நீங்கள் போராளியாக செயற்பட்ட ஒருவர். 1995 காலப்பகுதியில் நீங்கள் காயமடைந்த பின்னர் போராட்டத்தில் இருந்து இடைவிலகி வீடு சென்றதும் திருமணம் செய்து கொண்டவர் என யாவரும் அறிந்ததே. பின்னர் 2005ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலை போராட்டத்தின் பணியாளராக நிதர்சனப்பிரிவில் இணைந்து செயற்பட தொடங்கினீர்கள். அந்த காலப்பகுதியில் காடுகள் சம்மந்தமாக நிகழ்ச்சி செய்திருந்தீர்கள் பின்னர் எல்லாளன் திரைப்பட செயற்பாட்டில் நீங்கள் ஒரு பணியாளராக இணைக்கப்பட்டார் அதன் உண்மை உறங்கவில்லை .
எல்லாளன் திரைப்படம் படம் எடுத்த காலப்பகுதியின் தீவிர செயற்பாடும் அதன் தேவைகளும் வேறு ஒன்றாக இருந்தது. நீங்கள் சொல்லும் காலம் சூழல் பொருத்தமற்றது . நீங்கள் சொல்லும் பல விடயங்களில் எனக்கு உடன்பாடில்லை தேசிய தலைவருடன் உங்கள் உறவுநிலை பற்றிய விடயம் ஒரு யதார்த்தமற்றதும் உண்மைக்கு புறம்பானவை கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பின் நிர்வாகம் /அதன் செயற்பாடுகளையும் உங்கள் கற்பனையில் சிதைத்து விடாதீர்கள். உங்கள் தொழிலிற்கான ஊதியத்தியத்தினை வழங்கியிருந்தார்கள் அக்காலப்பகுதியில் அமைப்பு வழங்கிய ஊதியம் உங்களுக்கு உதவியதை மறந்து விட்டீர்கள் அதை இவ்விடத்தில் நினைவு படுத்துகின்றேன் .
புகைப்படம் , நிதர்சன நிறுவனம் பல்துறை சார் ஆளுமைகளை கொண்டு பல வருடகாலமாக இயங்கியவந்த ஒன்று. அவர்கள் உங்களிடம் இருந்து எந்த தொழில்நுட்ப அறிவு திறன் உதவிகளை பெறவேண்டும் என்ற தேவைப்பாடும் ,அவசியமும் இருக்கவில்லை . நீங்கள் புகைப்படம் /திரைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்டவர் என்பதனால் உங்களுக்கு நிதர்சன பிரிவின் ஊடாக ஒரு இணைப்பினை ஏற்படுத்திட ஊதிய பணியாளராக செயற்பட்டவர் நீங்கள். அக்காலப்பகுதியில் உங்களின் ஆர்வக்கோளாறுகளினாலும் நீங்கள் செய்த சின்னத்தனமான செயற்பாட்டினாலும் தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் இருந்து நீக்கப்பட்டமையும் ,எல்லாளன் படப்பிடிப்பில் இருந்து பொறுப்பாளர்களினால் இடைநிறுத்தப்பட்டதும் உங்களை அறிந்த பல போராளிகளிற்கும் , கலைஞர்களுக்கும் இவை நினைவிருக்கும் என நம்புகின்றேன்.
நீங்கள் பதிவேற்றும் பல புகைப்படங்களுக்கு நீங்கள் உரிமை கொள்ளுகின்றீர்கள். அதன் உண்மை என்ன … ? 2009 யுத்தம் உக்கிர மடைந்த காலப்பகுதியில் உங்கள் மனைவி காயமடைந்த நிலையில் கப்பல் மூலம் இராணுவ கட்டுப்பாடிற்கு செல்ல இருந்த போது அவருடன் நீங்களும் செல்ல இருந்த நிலையில் புகைப்பட பிரிவு போராளி ஒருவரினால் உங்களிடம் ஊடகங்களுக்கு கொடுக்குமாறு ஒரு தொகை புகைப்படம் தரப்பட்டதினையும் இவ்விடத்தில் உங்களுக்கு நினைவுபடுத்துகின்றேன் . தவிர்க்க முடிய காரணத்தினால் உங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதினையும் நாம் அறிவோம்.
இப்படங்களில் ஒரு சிலவற்றை தவிர ஏனைய படங்களுக்கு நீங்கள் உரிமை கோருவது பொருத்தமற்றது. போராளிகளினால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஏற்கனவே ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டு இணையங்களில் வெளி வந்த படங்களையும் உரிமம் கோருவது மிகவும் மனவருத்தம் தரும் விடயம் . அத்த படங்களை எடுத்த பல போராளிகள் இன்றும் இருக்கின்றார்கள். புகைப்பட பிரிவின் போராளி ஒருவரால் உங்களிடம் தரப்பட்ட மூலம்பிரதிகளை நீங்கள் மறந்திருந்தாலும் அல்லது மறைந்தாலும் இந்த உண்மைகள் தெரிந்த பலர் இருக்கின்றோம். உங்களிடம் படங்களை தந்த போராளி இன்று எம்முடன் இல்லை என்பதனால் எதையும் இலகுவில் கூறிவிடலாம் என நினைக்கவேண்டாம். படங்களை எடுத்த பலர் எம்முடன் உயிருடன் இருக்கின்றார்கள்.
அவுஸ்ரேலியாவில் வெளிவந்த நூல் ஒன்றில் உங்கள் புகைப்படம் மட்டும் பதிவிடப்படவில்லை அந்த நூல் ஆசிரியரிடம் பல விடயங்களை கதைத்து படங்களை ஒப்படைதவன் நான் என்ற முறையில் இந்த இடத்தில் சொல்ல வேண்டிய கடமை உள்ளது . போராட்டத்தின் போது எடுத்த பல படங்கள் உங்களிடம் இருப்பதாக கூறி வெளிநாடு வருவதற்கு புலம்பெயர் தேசிய செயற்பாட்டாளர்களிடம் விலை பேசி வந்ததை யாரும் அறியவில்லை என நினைக்க வேண்டாம் .
விடுதலை புலிகளுக்கும் உங்களுக்கும் இருந்துவந்த உறவும் ,இடைவெளியும் என்ன என்பதையும் நாம் அறிவோம் போராட்ட வரலாற்று ஆவணங்களை நீங்கள் தனிமனிதனகா உரிமை கூறாதீர்கள் . உங்கள் செயற்பாடுகள் தேசியத்துக்கு ஆதரவாக இருப்பதான ஒரு புலக்காட்சி புலத்தோற்றம்,
ஆனால் … ! அதன் உள் அர்த்தம் பதிவுகளை மீள மீள வாசிக்கும்போது புரிகிறது . நீங்கள் பதிவிடம் பதிவுகளுக்கு நாம் இடும் உண்மைகள் நிறைந்த கருத்துக்களை அழிக்காதீர்கள். பொது வெளியில் வாதிடலாம் வாருங்கள் உங்களுடன் வாதிட ஆதாரங்களுடன் நாம்.
‘எல்லாளன்’ திரைப்பட உருவாக்கத்தின் போது, நான் கூடவே இருந்திருக்கிறேன். அத் திரைப்படத்தின் ஒளிப்படம் சார் பணிகள் யாவும் என்னுடையவை தான். திரைப்பட உருவாக்கத்துடனான பயணத்தில் பல்லாயிரக்கணக்கிலான ஒளிப்படங்களை நான் பதிவாக்கியிருக்கிறேன். பல்வேறு இடங்களுக்கும் வன்னியின் காடுகளுக்கும் பயணித்திருக்கிறேன். படப்பிடிப்புக் காலம் மிகவும் நெருக்கடியானது. உயிராபத்துக்கள் நிறைந்த பணியாக அது இருந்தது. படப்பிடிப்பின் போது அதில் சம்மந்தப்பட்ட நான்கு பேர் 2008-02-17 அன்று ‘பளை’ பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் எறிகணைத் தாக்குதலில் சாவடைந்தபோது நான் பக்கத்தில் இருந்தேன். மயிரிழையில் உயிர் தப்பினேன்.
‘எல்லாளன்’ திரைப்படத்தைத் தயாரித்தது விடுதலைப் புலிகள் இயக்கம் தான். அதன் தலைவர் பிரபாகரன் அவர்களின் நேரடி அவதானிப்பில் அது தயாரானது. மிகுந்த எதிர்பார்ப்புடன் திரைப்பட உருவாக்கத்தை அவர் அவதானித்துக்கொண்டிருந்தார். படப்பிடிப்பின் போது, முன்னறிவித்தல் இல்லாமல் அதிகம் பேருக்குத் தெரியாமல் அவர் படப்பிடிப்புத்தளத்துக்கு வந்து பார்த்திருக்கிறார். அனுராதபுர வான்படைத் தளத்தின் மீதான பாரிய தாக்குதல், அவரது நேரடி நெறிப்படுத்தலில் நடந்ததுதான். எனவே அத் தாக்குதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘எல்லாளன்’ திரைப்படத்தில் அவரது விசேட கவனம் இருந்தது. தயாரிப்பை நேரடியாக வழிப்படுத்தியவர் சேரலாதன். அவர்களது விசேட அழைப்பில், அவர்களது வேண்டுகோளுக்கு அமைவாக எனது பணிகள் அமைந்திருந்தன. புகைப்படப் பிரிவில் பல போராளிகள் இருக்கும் நிலையில் என்னை எதற்கு இந்த வேலைத்திட்டத்தில் இணைக்கிறீர்கள் என்று நான் கேட்டபோது, பிரபாகரனின் விருப்பமும் தனது விருப்பமும் அதுவாக இருப்பதாக சேரலாதன் கூறினார். மேலும், அதிக பொருளாதாரச் செலவுடன் கூடிய பெரிய வேலைத்திட்டமாக இது இருப்பதால் எனது உதவியும் தேவை என்று கூறப்பட்டது. தொழில் நுட்ப ரீதியிலான எனது பங்களிப்பையே இத் திரைப்படம் அதிக அளவில் உள்வாங்கியிருக்கிறது. திரைப்படத்தில் எனது பெயரும் கூட இருக்கிறது.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், இதில் நடித்த பெண் போராளிகளின் உடைகள் சரியில்லாமல் இருப்பதாகவும் அவர்களது தோற்றம் முதிர்ச்சியற்றதாகத் தெரிவதாகவும் வேறு சில பெண் போராளிகள் பிரபாகரனுக்கு சொல்லியிருந்தார்கள். அதன் பிறகு படப்பிடிப்பை உடனடியாக நிறுத்துமாறு பிரபாகரன் சொல்லிவிட்டார். படம் பாதியிலேயே நின்றுவிடக் கூடும் என்ற நிலைமை இருந்தது. ஒரு மாதமளவில் படப்பிடிப்பு நடக்கவில்லை. அப்போது, அதுவரை நான் பதிவுசெய்திருந்த ஒளிப்படங்களில் இருந்து பலவற்றைத் தேர்ந்தெடுத்து, colour correction செய்து இரண்டு தொகுதிகளாக்கி (albums) பிரபாகரனுக்கு காட்டவேண்டியிருந்தது. அவற்றைப் பார்த்து படவேலைகளில் திருப்தியடைந்த பிரபாகரன், தொடர்ச்சியான படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கினார். அந்த இரண்டு ஒளிப்படத் தொகுதிகளும் உருவாக்கப்பட்ட பிறகு தான், திரைப்படத்தின் ஒட்டுமொத்த வர்ணம் (colour correction) தொடர்பிலான விவாதங்கள் எழுந்தன. நான் முன்வைத்த தொழில் நுட்ப அழகியல் ரீதியிலான ஆலோசனைகளுக்கு தயாரிப்பு நிர்வாகத்தினரின் வரவேற்பு ஆரம்பத்தில் இருக்கவில்லை.
எனது பார்வையில் ‘எல்லாளன்’ திரைப்படமானது ஒரு முக்கியமான முயற்சி மட்டுமே. அது இன்னமும் நன்றாக வந்திருக்க வேண்டும். அதன் திரைக்கதை உருவாக்கத்தின் போதும், படப்பிடிப்பின் போதும் பல சிக்கல்கள், பிரச்சினைகள் ஏற்பட்டன. ஒருவரை மட்டும் இயக்குனராக குறிப்பிடுவது கடினம். (அதனாலேயே பொதுவாக ‘தமிழன்’ என்ற பெயர் பாவிக்கப்பட்டிருக்கிறது.) தனித்துவமான ஒரு இயக்குனர் இல்லாதிருந்தது இந்தப் படத்தின் பிரதானமான பலவீனங்களில் ஒன்று. ஆனாலும் பல காட்சிகளை இயக்கியவர் தமிழகத்தை சேர்ந்த முருகன் என்பவராவார். ஒளிப்பதிவுப் பணியைப் பொறுத்தவரையில் சந்தோஷ் தனது பங்களிப்பைக் குறிப்பிடத்தகுந்த முறையில் செய்திருக்கிறார். திரைக்கதை உருவாக்கத்தில் அதிகம் அக்கறை காட்டப்படவில்லை என்பதே எனது அவதானிப்பு.
அத் திரைப்படத்துக்கு ஒருவரோ ஒருசில தனி நபர்களோ இப்போது உரிமை கோர முடியாது. பலருடைய கடின உழைப்பு அதனுள் இருக்கிறது. பெருந்தொகையான பொருளாதாரச் செலவில் படமாக்கப்பட்டது. ஒரு உலங்கு வானூர்தியின் மாதிரி (model) மட்டும் கிட்டத்தட்ட பத்து லட்சம் செலவில் செய்யப்பட்டது. படமாக்கப்பட்ட பல காட்சிகள் இறுதியாக வெளிவந்த படத்தில் இடம்பெறவில்லை. இறுதி யுத்தம் தீவிரமடைந்த நிலையில் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் (Post Production) நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருந்தன. திரைப்படத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப ஆளுமை மிக்க போராளிகள் உட்பட பலர் இப்போது இல்லை. விநோதன், வினோத், தினேஸ், குணவேந்தன், நீதன், முல்லை யேசுதாசன், சந்தோஷ், முருகன் உட்பட சிலர் இன்னமும் இருக்கிறார்கள். திரைப்படம் தொடர்பிலான யாருடைய பங்களிப்புக்களும் உதாசீனம் செய்யப்படக் கூடியதல்ல. உயிராபத்துக்கள் நிறைந்த சூழ்நிலைகளில் அர்ப்பணிப்புக்களோடும் பற்றாக்குறைகளோடும் நடைபெற்ற கூட்டு முயற்சி தான் ‘எல்லாளன்’ திரைப்படம். சிறிலங்கா இராணுவத்தினரின் எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்குதல்கள் அப்போது அதிகமாக இருந்தன. பல்வேறு நெருக்கடிகளுக்கும் குளறுபடிகளுக்கும் மத்தியில் திரைப்படம் உருவாகியிருக்கிறது. (சில விடையங்கள் பொதுவெளியில் இப்போது சொல்லப்படுவது பொருத்தமற்றதாக, தனிமனித அவதூறாக, இப்போதும் உயிருடன் இருக்கும் சில தனிநபர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக அமைந்துவிடக் கூடும்.) படத்தோடு சம்மந்தப்பட்ட பல்வேறு விடையங்களும் படத்தில் சம்மந்தப்பட்ட பலருக்குத் தெரியாது.
‘எல்லாளன்’ திரைப்பட உருவாக்கம் தொடர்பில் பல்வேறு சுவாரஸ்யமான, சாகசத்தன்மை நிறைந்த, அரிதான அனுபவங்கள் என்னிடம் உள்ளன. பிறகு ஒரு காலத்தில், முடிந்தால் விரிவாக எழுத வேண்டும்.
‘எல்லாளன்’ திரைப்பட உருவாக்கம் பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல் தவறான, பொறுப்புணர்வற்ற, கண்ணியமற்ற விவாதங்கள் அவ்வப்போது நடைபெறுவது ஆரோக்கியமானதல்ல. ‘எல்லாளன்’ திரைப்பட உருவாக்கம் பற்றி, பெருமளவுக்கு அறிந்தவன் என்ற வகையில் சில விடையங்களைப் பதிவு செய்யவேண்டுமென்று தோன்றியது.