கடுமையான சட்டதிட்டங்கள் அமுலில் உள்ள நாடான சவுதி அரேபியாவில், 24 ஆண்டுகள் சட்டவிரோதமாக வாழ்ந்துள்ளார் தமிழர் ஒருவர்.
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஞான பிரகாசம் ராஜமரியான். இவர் 1994 ஆம் ஆண்டு சவுதியின் ஹெயில் மாகாணத்தில் உள்ள பண்ணை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
அவருக்கு அந்த பண்ணையில் சரியான ஊதியம் வழங்கப்படாததால் அவர் அங்கிருந்து தப்பித்து சவுதியிலுள்ள பாலைவன பகுதியில் சட்டவிரோதமாக வசிக்க தொடங்கியுள்ளார்.
1994 ஆம் ஆண்டு தமிழகத்தை விட்டுவந்த ஞான பிரகாசம், அதன் பிறகு தன் சொந்த மண்ணுக்கு ஒருதடவைக் கூட செல்லவில்லை. ஆனால், தன் குடும்பத்துக்குத் தவறாமல் பணம் அனுப்பி வந்துள்ளார். ஞான பிரகாசம் வீட்டைவிட்டு வந்தபோது அவரின் நான்கு பெண் பிள்ளைகளும் சிறுமிகளாக இருந்துள்ளனர்.
உரிய ஆவணங்கள் ஏதுமின்றி சட்டவிரோதமாக பாலைவனத்தில் தஞ்சம் புகுந்த ஞான பிரகாசம், தனது நான்கு மகள்களின் திருமணத்துக்கும் செல்ல முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.
தற்போது, ஞான பிரகாசத்துக்கு 52 வயது. இந்த நிலையில் சமூக ஆர்வலர் ஒருவரின் உதவியுடன் ஞான பிரகாசம் தற்போது தமிழகம் திரும்பவுள்ளார்.
ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் விசா காலம் முடிந்த பிறகும் சட்டவிரோதமாக வசிக்கும் பிற நாட்டவருக்கு 90 நாள்கள் கருணை காலம் அளிக்கப்படுவதுண்டு.
அதேபோன்று தற்போது சவுதி அரசும் 90 நாட்கள் கருணை காலம் வழங்கியுள்ளது. மட்டுமின்றி கருணை காலம் முடிவுக்கு வந்த பின்னரும் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஞான பிரகாசம் குறித்து தமிழக அரசோ, மத்திய வெளியுறவு அமைச்சகமோ எந்தத் தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.