சமூகக் கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலை எங்கு நிகழ்கின்றதோ அங்கு இனப்பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வை இலகுவில் காணமுடியாது. “Structural Genocide” என்ற அரசியற் கோட்பாடானது அரசியல் விஞ்ஞானத்திற்கு ஒரு முக்கிய பங்களிப்பாகும்.
இது பற்றிய கோட்பாட்டு விளக்கத்தை புரிந்து கொண்டால் தான் இதற்கான அரசியலை சரிவர முன்னெடுக்க முடியும். இப்பதபிரயோகம் முதலில் இனப்பிரச்சனைகளின் பெயரால் பிரயோகிக்கப்பட்டதல்ல.
பதிலாக மனித குலத்தில் ஏற்படும் அழிவுகளுக்கு சமூக பொருளாதார கட்டமைப்பு எப்படி காரணமாக இருக்கிறது என்பதிலிருந்து இதற்கான பதம் பிரயோகிக்கப்படும் நிலை உருவானது.
ஆட்கொல்லி நோய்கள், பஞ்சம், யுத்தம் என்பவற்றால் ஏற்படும் அழிவுகள் வெளிப்பார்வைக்கு இயல்பானவை போல் தோன்றினாலும், நடைமுறையில் அவை சமூக அரசியல், பொருளாதார அமைப்புக்களின் தவறுகளால் உருவாகின்றன என்பது அடையாளங் காணப்பட்டு, அந்த வகையில் ஏற்படக்கூடிய மனித அழிவை “Structural Genocide” என்ற பதத்தால் அழைக்கும் நிலை உருவானது.
வர்த்தக நோக்கில் அதிகரித்திருக்கும் மருந்தின் விலை, சத்துள்ள உணவின்மையால் தோன்றும் நோய்கள், இவற்றிற்கான வர்த்தகக் காரணங்கள், அரசியல் நோக்கு நிலையிலான யுத்தங்கள், சமூக அமைப்பின் இயலாமையால் தோன்றும் யுத்தங்கள், வர்த்த நோக்கின் வெளிப்பாடாய் தோன்றும் யுத்தங்கள், சமூக பொருளாதார குறைபாடுகளால் ஏற்படும் சமூக மோதல்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு யுத்தங்கள் என்பனவற்றிற்கு எல்லாம் ஏதுவான அரசியற் பொருளாதார சமூக அமைப்பின் குறைபாடுகள் அடிப்படையில் உருவாகும் மனித அழிவை “Structural Genocide” என்ற பதத்தால் அழைக்கும் நிலை உருவானது.
இதில் ஒன்று இனப்பிரச்சினையாகும். ஒரு நாட்டில் காணப்படும் அரசியற் பொருளாதார சமூக அமைப்பின் கட்டமைப்பு ரீதியான தவறால் ஏற்படக்கூடிய அரசியற் பொருளாதார பிரச்சனைகளை ஆட்சியாளர்கள் இலகுவாக இனப்பிரச்சனைகளின் பக்கம் திசைதிருப்பிவிடுவது வழக்கம்.
இந்நிலையில் இலங்கைத் தீவில் ஏற்படக்கூடிய அனைத்து அரசியற் பொருளாதார பிரச்சினைகளையும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பெரும்பான்மையினத் தலைவர்கள், அளவுரீதியில் பலத்தால் குறைந்த தமிழ் – முஸ்லிம் இனங்கள் மீது இலகுவாகத் திசைதிருப்பி தமது அரசியல் நலன்களை அடைந்து கொள்கின்றனர்.
அந்த வகையில் இலங்கையில் உள்ள இனப்பிரச்சினையானது ஒரு வகையில் இலங்கையில் காணப்படும் அரசியல் பொருளாதார சமூக அமைப்பின் வெளிப்பாடாக உருத்திரண்டு அது ஈழத் தமிழர்களையும், முஸ்லிம்களையும், மலையகத் தமிழர்களையும் காவு கொள்ளக்கூடிய அடிப்படையைக் கொண்டுள்ளது என்பது “Structural Genocide”என்ற இக்கோட்பாட்டுக்குரிய முதற் பொருளாகும்.
ஆனால் இது இவற்றையும் உள்ளடக்கி அதேவேளை இதையும் தாண்டிய ஒரு இனவாத சமூக கட்டமைப்பு இலங்கை அரசியலில் வலுவாக ஸ்தாபிதம் பெற்றுள்ள நிலையில், அதனுடன் மேற்கூறப்பட்டதும் இணைந்து தமிழ் – முஸ்லிம் – மலையக மக்களை இலகுவாக பலியெடுக்கக் கூடியதாக அமைகிறது.
எனவே பொருளாதார ரீதியான சமூக அமைப்புடன் இலங்கைக்கேயுரிய தனித்துவமான புவிசார் அரசியல் வரலாற்றுப் பின்னணியுடன் இணைந்து கட்டமைப்புச் செய்யப்பட்டுள்ள பெரும்பான்மையினவாத அரசியல் நிர்மாணிப்பானது எப்போதும் தமிழ் – முஸ்லிம் – மலையக மக்களுக்கு எதிரான அடித்தளத்தைக் கொண்டதாய் உள்ளது.
இதில் அரச இயந்திரத்தைக் கொண்டுள்ள ஆட்சியாளரின் எதிர்ப்பானது முனைப்பான இனமாக உள்ள ஈழத் தமிழர் மீது முதலில் மையம் கொள்கிறது. இத்தகைய மையங் கொள்ளலானது வெறுமனே நிகழமுடியாது.
அதற்கேற்ற கருத்தாக்கமும், மக்களை ஒன்றுதிரட்டும் முறையும் கூடவே இணைக்கப்பட்டு அதற்கேற்ற அரச இயந்திர கட்டமைப்பு உருவாக்கப்படும் போதுதான் அதனை செயற்படுத்த முடியும்.
இந்த வகையில் ஈழத் தமிழருக்கு எதிரான எதிர்ப்பு உணர்வை மகாவம்ச கலாச்சாரத்திலிருந்து கருத்து ரீதியாக கட்டமைப்புச் செய்கின்றனர்.
அதாவது கி.மு 2ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த எல்லாளன் – துட்டகாமினி யுத்தம் இனரீதியானதா?, இல்லையா? என்ற வாதப்பிரதிவாதங்களுக்கு அப்பால் தொன்மையான மகாவம்சம் நூலின் வாயிலாக அது இனயுத்தம் என்ற உணர்வை ஊட்டக்கூடிய வகையில் பிரயோகம் பெறுகிறது.
அங்கு கொல்லப்பட்ட இலட்சக்கணக்கானோர் தமிழர்கள் பற்றி மன்னன் துட்டகாமினி கவலைப்படுவதாகவும் அவரை ஆற்றுப்படுத்துவதற்காக பௌத்தத் துறவிகள் பின்வருமாறு ஆறுதல் கூறுவதாகவும் மகாவம்சம் அத்தியாயம் 25, பந்தி 110ல் பின்வருமாறான உரையாடல் காணப்படுகிறது.
“இந்த செயலின் காரணமாக நீ சொர்க்கத்திற்குப் போகும் பாதையில் எவ்விதத் தடையும் ஏற்படாது” என்று பௌத்தத் துறவிகள் மன்னனிடம் எடுத்துக் கூறியதுடன், அவ்வாறு கொல்லப்பட்ட இலட்சக்கணக்கானோர் பற்றி மேலும் கூறுகையில் “நமது மார்க்கத்தை நம்பாதவர்கள், தீய வாழ்வை மேற்கொண்டவர்கள், மிருகங்களை விட உயர்வாக மதிக்கப்படக் கூடாதவர்கள்” என்று பலவாறாகக் கூறி அவரை ஆற்றுப்படுத்தியதாக உரையாடல் தொடர்கிறது.
இதில் உள்ள உண்மைகள் பொய்கள் என்பவற்றிற்கு அப்பால் ஈழத் தமிழர்களுக்கு எதிரான கருத்துருவத்தை இதன் அடிப்படையில் வடிவமைத்து சிங்கள மக்களின் மனங்களில் விதைக்கப்பட்டுள்ள நடைமுறையை நூற்றாண்டுக்கணக்கான நவீன வரலாற்றில் காணமுடிகிறது.
இவ்வாறு ஈழத் தமிழர்களுக்கு எதிரான ஒரு கருத்துருவத்தை இந்த மகாவம்சத்தின் அடிப்படையில் கட்டமைப்புச் செய்து அதன் அடிப்படையிலான அரசியல் முன்னெடுப்புக்கள் செய்யப்படும் ஒரு அரசியல் சமூக கட்டமைப்பை இலங்கை அரசியல் கொண்டுள்ளது.
இந்த கட்டமைப்பினால் நிகழக்கூடிய அழிவுகளையும், சேதங்களையும் “Structural Genocide”என்ற அடித்தளத்தில் வைத்து பார்வையிட வேண்டும்.
இந்த வகையில் உருவாக்கப்பட்ட கருத்தாக்கமும், மனப்பாங்கும் பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் ஆழமாகவும், விரிவாகவும் ஸ்தாபிதம் அடைந்திருக்கும் பின்னணியில் தமிழர்கள் மிருகத்தைவிட கீழானவர்கள் என்ற உணர்வுடன் படுகொலை கலாச்சாரத்திற்கு உட்படுத்தப்படுவது இலகுவாக உள்ளது.
அதாவது முள்ளிவாய்க்காலில் வகைதொகை இன்றி தமிழ் மக்களை சிங்கள இராணுவம் கொன்று குவிக்கும் போது மேற்படி கருத்துருவத்தின் கீழ் அவர்கள் மனிதர்களைக் கொல்வதாக நினைப்பதை விட மிருகத்தைவிடவும் கீழான ஏதோ ஒருவகை பிராணிகளைக் கொல்வதாகவே நினைத்து அந்த படுகொலையை அரங்கேற்றி உள்ளார்கள் எனத் தெரிகிறது.
எனவே இதனை கருத்து ரீதியாக, மதரீதியாக, வரலாற்று உணர்வுடன் கட்டமைப்புச் செய்யப்பட்ட ஓர் இனப்படுகொலை சமூக அமைப்பின் வெளிப்பாடு என கொள்ளும் போது இது எவ்வளவு பாரதூரமான “Structural Genocide”என்பதை புரிந்து கொள்ள முடியும்.
இலங்கையில் இராணுவம் கட்டமைப்பு செய்யப்பட்டிருப்பது ஒரு வெளிநாட்டுடனான யுத்ததிற்காக அல்ல. மாறாக அது ஈழத் தமிழர்களுக்கு எதிரான யுத்தத்திற்காகவே கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தினுடைய அடிமன உணர்வு தமிழின எதிர்ப்பைக் கருப்பொருளாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு நவீன இராணுவமாக கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தின் தொகை 1983 ஆம் ஆண்டு 12,000ஆக இருந்தது. லலித் அதுலத் முதலி தேசிய பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்கும் போது இத்தொகையுடன் பொறுப்பேற்று அதனை ஒரு நவீன இராணுவமாக கட்டமைப்புச் செய்யும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது முழுத் தமிழின எதிர்ப்பு உணர்வோடுதான் இலங்கை இராணுவம் நவீன இராணுவமாக கட்டமைப்பு செய்யப்பட்டது என்பது கவனத்திற்குரியது.
இதைத் தொடர்ந்து 1987ஆம் ஆண்டு 40,000ஆக அதிகரித்த இராணுவத்தின் தொகை 1990ஆம் ஆண்டு 90,000ஆகவும், 2013ஆம் ஆண்டு 2,23,000ஆகவும் 2016ஆம் ஆண்டு 2,60,000ஆகவும் அதிகரித்துச் செல்வதைக் காணலாம்.
இலங்கை அரசியலானது தமிழின எதிர்ப்பின் அடிப்படையிற்தான் இராணுவ மயமாக்கப்படுவதைக் காணலாம். அதன் விளைவாக இராணும் அரசியல் மயமாகும் போக்கும் வளர்ந்தது.
எனவே இலங்கையின் இராணுவக் கட்டமைப்பு தமிழின எதிர்ப்புத் தன்மையைக் கொண்டது என்ற வகையில் இலங்கை இராணுவத்தை “Structural Genocide”க்குரிய ஒரு முக்கிய கருவியாக கருத்தில் கொள்ளவேண்டும்.
மேலும் அரசியல் யாப்பு தமிழின எதிர்ப்புணர்வுடன் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியல் யாப்பின் வரலாறே இன விரோத அரசியல் யாப்புக் கலாச்சாரத்தை கட்டமைப்பாகக் கொண்டு அமைந்துள்ளது.
சட்டங்களும் இன எதிர்ப்பு உணர்வுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழ் மக்களுக்கு எதிரான உணர்வுடன் விவசாய மற்றும் மீன்பிடி குடியேற்றங்கள் என்பதன் பேரில் சிங்களக் குடியேற்றங்கள் கட்டமைப்பு செய்யப்பட்டு தமிழினத்திற்கான தேசிய அடித்தளம் அழிக்கப்படுகிறது.
நிர்வாகமும் இவ்வாறே கட்டமைப்புச் செய்யப்பட்டுள்ளது. நீதித்துறையும் அவ்வாறே காணப்படுகிறது. அரசியல் ரீதியாக இணைக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாண சபைகளை வெறும் சட்டநுணுக்க காரணங்களினால் நீதித்துறை பிரித்தமை அரசியல் வளர்ச்சிக்கு எதிரானது. ஆனால் அதுதான் இலங்கை நீதித்துறையின் கட்டமைப்பாகும்.
நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் “குமாரபுரம் படுகொலையில்” குற்றம் சாட்டப்பட்ட ஆயுதப் படையினர் அனைவரும் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அனுராதபுர நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டமை இலங்கை நீதித்துறைக்கு இருக்கக்கூடிய இனவாத கட்டமைப்பின் பலத்தைக் காட்டுகிறது.
இப்பின்னணியில் இலங்கையின் அரசியலானது தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துருவாக்க கட்டமைப்பைக் கொண்டு வடிவமைக்கப்பட்டதோடு அரசியல் யாப்புக்கள், சட்டங்கள், நிர்வாக ஏற்பாடுகள் என்பனவும் அத்தகைய கட்டமைப்பிற்குரியவையாக காணப்படுகின்றன.
இவை அனைத்திற்கும் பொருத்தமாக இராணுவமும், பொலிசும், புலனாய்வும் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளன. தமிழ் மக்களை ஆயுத ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் ஒடுக்குவதற்கு அப்பால் சமூக ரீதியாக சிங்களக் குடியேற்றங்களை தமிழ் மண்ணில் ஏற்படுத்துவதன் மூலம் தமிழர்களின் தேசியத் தளம் குறுக்கப்பட்டும் அவர்கள் உதிரிச் சிறுபான்மையினராக ஆக்கப்படும் அரசியல் கட்டமைப்பு காணப்படுகிறது.
இவை அனைத்துடனும் கூடவே நாட்டைவிட்டு தமிழர்கள் புலம்பெயர்வதும் மேற்படி கட்டமைப்பின் ஓர் அங்கமாக உள்ளது.
ஆதலால் இரத்தம் தோய்ந்த இனப்படுகொலை என்பது “Structural Genocide”” இன் ஓர் அங்கமாகும். அதேவேளை அவற்றுடன் கூடவே மேற்படி அங்கங்கள் அனைத்தும் இணைந்து முழுவடிவம் பெறுகின்றன.
இந்த வகையில் தமிழ் மக்களின் மரணத்திற்கும், பசி – பட்டினி, வேலையின்மை, பொருளாதார வளர்ச்சியின்மை, இராணுவ – பொலிஸ் – புலனாய்வு ஆட்சிக்கு உட்பட்டு இருக்கின்றமை, உள்ளும் – புறமும் புலம் பெயர்கின்றமை, ஆக்க சக்திக்கான வாய்ப்புக்கள் இல்லாமல் போகின்றமை, இராணுவ முற்றுமைச் சூழலில் மனம் சுருண்டு ஆக்க சக்தி அழிந்து போகின்றமை, அரசியல் தீர்வுவின்மை என “Structural Genocide” இன் கூட்டுமொத்த பகுதிகளாகும்.
சூடான் அரசில் தென் சூடானிய மக்களுக்கு எதிராக வட சூடானியரின் ஒடுக்குமுறை இருந்தது. இதில் வட சூடானின் ஒடுக்குமுறையானது “Structural Genocide” என்ற வகைப்பாட்டிற்கு உரியதாக காணப்பட்டது.
சாதாரணமான சிறு, சிறு பிரச்சனைகள் இனங்களுக்கிடையே இருக்குமானால் அவை தீர்த்துக் கொள்ளப்படக் கூடியவையாய் அமையமுடியும்.
ஆனால் ஓர் இனம் அழிந்து போவதற்கு ஏதுவான வகையில் அரசியல், பொருளாதாரம், பண்பாடு, நிர்வாகம், இராணுவம், அறிவியல், ஊடகவியல் என்பன வடிவமைக்கப்பட்டிருந்தால் அங்கு இன ஐக்கியம் என்பது ஒருபோதும் சாத்தியப்படமாட்டாது என்பதுடன் ஒரு நாடு என்ற கட்டமைப்பிற்குள் அரசியல் தீர்வும் சாத்தியப்படாது.
சூடானில் அல்நிமேரி ஜனாதிபதியாக இருக்கும் போது முதற் கட்டத்தில் அவர் ஒடுக்குமுறையைப் புரிந்திருந்தாலும் இரண்டாவது கட்டத்தில் அவர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தானாக முன்வந்து தென் சூடானுடன் சமாதானபூர்வமான அரசியலுக்கு தயாரானார்.
ஆனால் சூடானிய அரசியலானது “Structural Genocide”” என்ற அடிப்படையைக் கொண்டிருந்ததால் தனிமனிதனின் மனமாற்றத்தால் எதுவும் செய்ய முடியாது போய் மீண்டும் பாரிய இனஅழிப்பு இரத்தம் தோய்ந்த வகையில் வடிவெடுத்த போது பிரிந்து செல்லல் தவிர்க்க முடியாது நிகழ நேர்ந்தது.
இலங்கையில் அனைத்து வகையிலும் தமிழின எதிர்ப்பு “Structural Genocide”என்ற அடிப்படையைக் கொண்டிருப்பதால் இவற்றிற்கு இலகுவான அரசியல் தீர்வு காண்பது என்பது சாத்தியமாகத் தெரியவில்லை.
ஆகையினால் தான் பெரும் எதிர்ப்பார்கைகளின் மத்தியில் பெரும் வாக்குறுதிகளுடன் பதவிக்கு வந்த “நல்லாட்சி அரசாங்கத்தால்” இனப்பிரச்சினைக்கான சுமுகமான தீர்வு நோக்கி ஓர் அங்குலம்தானும் முன்னேற முடியவில்லை.
நல்லாட்சி அரசாங்கத்தினர் ராஜபக்சவை எதிர்முனையில் முன்னிறுத்தி “இன நல்லிணக்கம்” பற்றி பெரிதாகப் பேசினர்.
ஆனால் கடந்த மே தினக் கூட்டத்தை நல்லாட்சி அரசாங்கத்தினரும், ராஜபக்ஷ அணியினரும் தனித் தனியாக நடாத்திய போது ராஜபக்ச அணியினருக்குத் திரண்ட மக்கள் திரளானது நல்லாட்சி அரசாங்கத்தின் கூட்டத்தில் கூடிய மக்கள் தொகையை விட மிகவும் பெரிதாக இருந்தது.
இதன் மூலம் இவர்கள் கூறிய ”நல்லிணக்கம்” என்பது சிங்கள மக்கள் மத்தியில் அர்த்தமற்றுப் போயிருந்ததைக் காணலாம். மொத்தத்தில் இலங்கையின் “Structural Genocide” என்பதற்குரிய கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
இதில் இனப்பிரச்சனையை சுமூகமாக தீர்க்கப்போவதாகக் கூறி பதவிக்கு வந்த “நல்லாட்சி அரசாங்கத்தின்” கட்டமைப்பு வடிவங்கூட “Structural Genocide”க்கு உரியதாகவே காணப்படுகிறது.
எனவே “நல்லாட்சி அரசாங்கத்தின்” கட்டமைப்பே “Structural Genocide”க்கு பொருத்தமாக கட்டமைக்கப்பட்டிருக்கும் போது அங்கிருந்து இனப்பிரச்சினைக்கான சுமூகமான தீர்வை எதிர்பார்ப்பது சாத்தியமில்லை.
அதாவது இன்னொரு வகையில் கூறுவதானால் தமிழின அழிப்பை முன்னெடுப்பதற்கு ஏதுவான இன்னொரு வடிவமாக “நல்லாட்சி அரசாங்கம்” என்ற கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறலாம்.
இதை இன்னும் ஆழமாகக் கூறுவதென்றால் இலங்கையில் கெட்டியாக வடிவம் பெற்றுள்ள தமிழின எதிர்ப்பு அரசியற் சமூக கட்டமைப்பின் இன்னொரு வகையில் கடைந்தெடுக்கப்பட்ட வார்ப்பாக “நல்லாட்சி அரசாங்கம்” வடிவம் பெற்றுள்ளது.
இங்கு பிரச்சினை கட்டமைப்பு ரீதியானதே தவிர நபர்கள் ரீதியானது அல்ல. ஆதலால் ஈழத் தமிழர் பிரச்சனையை ஒரு முழுநீளமான “Structural Genocide” என்ற வடிவத்திற்குள்ளால் பார்க்கத் தவறினால் அவற்றிற்கான தீர்வுகளைப் பற்றி சிந்திக்க முடியாது.
இந்த வகையில் குறிப்பாக சுதந்திரக் காலத்திலிருந்து ஈழத் தமிழர்களுக்கு எதிரான அரசியல் சமூக கட்டமைப்பு “Structural Genocide” என்ற வடிவில் தோன்றி வளர்ந்திருக்கிறது.
இதில் டி.எஸ்.சேனநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் அனைத்து வகையிலும் தமிழின அழிப்பிற்கான “Structural Genocide” தெளிவாக கட்டமைப்பு செய்யப்பட்டுவிட்டது. இன்று காணப்படும் பல்வேறு அம்சங்களையும் அதன் தொடர்ச்சியாகவும், வளர்ச்சியாகவுமே காணலாம்.
ஒட்டுமொத்த “Structural Genocide”இல் முள்ளிவாய்க்கால் படுகொலை என்பது இரத்தம் தோய்ந்த வடிவிலான ஓர் அங்கம் மட்டுமே. தற்போது அது ஏனைய அனைத்து வழிகளிலும் முன்னேறிச் செல்கிறது.
யுத்தம் முடிவிற்கு வந்துள்ளது என்பதன் பொருள் ஒடுக்குமுறைக்கான வாய்ப்புகள் இராணுவ பலத்தால் திறக்கப்பட்டுவிட்டன என்பதேயாகும்.
எனவே யுத்த்தின் முடிவென்பது “Structural Genocide”யை மேலும் துரிதமாக முன்னெடுப்பதற்கான வாய்ப்பைக் கொடுத்துள்ளது.
“சமாதானத்திற்கான யுத்தம்” (War for Peace) என்று கூறிய சந்திரிக்கா பண்டாரநாயக்க உட்பட்ட சிங்கள ஆட்சியாளர்கள் சமாதானத்திற்கான தீர்வு என்பதை முன்வைக்கத் தவறினர். சமாதானம் யுத்தத்தினால் அல்ல தீர்வினால் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே சரியானது.
இப்போது யுத்தம் இல்லாத நிலையில் சமாதானம் ஏன் இல்லை என்பதற்கான பதில் இலங்கையின் அரசியல் “Structural Genocide”யைக் கொண்டதாக இருக்கின்றது என்பதுதான்.
எங்கு ஆதிக்கத்திற்குரிய இனத்தின் கையில் “Structural Genocide”க்குரிய கட்டமைப்பு இருக்கின்றதோ அங்கு சமாதானத்திற்கான தீர்வு காணமுடியாது என்பதற்கு யுத்தத்தின் பின்னான இலங்கையின் கடந்த 8 ஆண்டுகால அரசியல் வரலாறு மேலும் ஓர் உதாரணமாகும்.