நீங்கள் ஆடுங்கள்
விக்கிரகத்தில் இருந்த
மாலையைக் கழற்றி
உங்கள் கைகளில் கொடுத்த குற்றத்திற்காய்
சற்றே மௌனித்திருக்கிறோம்
அத்தனையும் பறிபோனபின்
கட்டியிருந்த அரைஞாண் கயிற்றையும்
உங்களிடம் களற்றிக்கொடுத்துவிட்டு
அம்மணமாய் நிற்கிறது
ஈழம்!!
என் தேசியக் கனவுகளை
“கூத்தாடி” இங்கே யாரும்
போட்டுடைக்கவில்லை
கூத்தாடிகளிடம் கொடுத்துவிட்டு
உடைந்துபோய் நிற்கிறோம்
இருந்த கடைசிக் கிணற்றையும்
தூர்த்துவிட்டு
விக்கித்து இறக்கவிருக்கும்
எம் மக்களுக்கு
இரங்கல் செய்தி எழுத இப்போதே
தயாராகியிருக்கிறது
வெள்ளைச் சட்டை போட்ட
கொள்ளைக் கூட்டம்
எம் கனவழிக்கும் கொள்கைக் கூட்டம்
புதுவையரே நீர் அன்று
புலம்பிய வரிகள் என் காதுகளில்
கேட்கிறது
இதோ பிரித் ஓதுவதற்கு ஒரு கூட்டம்
தயாராகிவிட்டது
அதோ வெண்பொங்கல் காய்ச்ச
வீடுவீடாய் பிச்சையெடுப்போர்
பெருகிவிட்டார்கள்
என் இளைஞனே!!
கத்தி தேவையில்லை
பொருக்கடித்துப்போயிருக்கும்
புத்தியை துலக்கு
பட்டப்பகலில் அநீதி நடக்கிறது
கொத்துக்கொத்தாய் இறந்தவர்க்கேனும்
நீதிகிடைக்கட்டும்
நிமிர்ந்து போராடு!
முல்லைத்தீவில் நூறுநாள்
தாண்டிவிட்டது
கிளிநொச்சியில் எம் உறவுகளின்
அழுகை ஒலி அடங்கவில்லை இன்னும்
ஒருநாள் ஏனும்
எட்டிப்பார்க்காத இவர்கள்தான்
சுதந்திர ஈழத்தில்
உன்னை சுபீட்சமாக நடக்க வைப்பார்..
காக்கைவன்னியனின்
விந்துக்கு இன்றளவும் வீரியம்
குறையவில்லை
மூலைக்கொன்றாய் முளைத்து
எழுகிறது
எம் இனத்தின் அடையாளம்
காக்கப்போவதாய் குரைத்துத்திரிகிறது
நம்பாதே!! தமிழா!!
நாம் நசிந்தது போதும்!!
அவ்வப்போது ஆலங்கட்டி
மழையைப்போல் நீதி பொழிய வரும்
ஒருசிலரையும் ஓதிச் சிதைக்கிறார்கள்
போதி நிழலில் தஞ்சம் புகுந்தவர்கள்
எல்லாம் தீர்ந்துபோன தேசத்தில்
இருப்பது என்னவோ அற்பச் சலுகைகள்தான்
அதையும் ஆட்சி மோகத்தில்
அடகுவைத்துவிட்டார்கள்
அறிவாய் தமிழா!!
இப்போது எங்களிடம்
ஆயுதங்கள் இல்லை
ஆட்சியாளன் இல்லை
ஆண்டவனும் இல்லை
அதிகாரமும் இல்லை
ஆனால் எல்லாவற்றையும் மாற்றமுடியும்
சிந்திப்பாய்!!
உனக்காய் அடுத்த தேர்தல்
காத்துக்கொண்டிருக்கிறது
– அனாதியன்