யாழ்.ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
ஊழலற்ற ஆட்சியைக் கொண்டு வருவதை எதிர்த்து ஊழல் வாதிகளைப் பாதுகாக்கும் நோக்கில், வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவதற்குத் தமிழரசுக்கட்சி முயற்சிப்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய செயல் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஒரு இலட்சத்து 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எமது மக்களின் வாக்குகளைப் பெற்று வடமாகாண சபை முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சீ.வி.விக்னேஸ்வரன்.
அவரை மாகாண சபைத் தேர்தலின் முதலமைச்சர் வேட்பாளராகத் தெரிவு செய்தமை தனியே தமிழரசுக்கட்சி மாத்திரம் எடுத்த தீர்மானமல்ல.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கக் கூடிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலைக் கழகம், தமிழரசுக் கட்சி ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து தான் அவரை வேட்பாளராக நிறுத்தின.
நிலைமை இவ்வாறிருக்க ஒரு ஊழலற்ற ஆட்சியைக் கொண்டு வருவதை எதிர்த்து ஊழல் வாதிகளைப் பாதுகாக்கும் நோக்கில் வடமாகாண முதலமைச்சருக்கெதிராக ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவதற்குத் தமிழரசுக்கட்சி முயற்சிப்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய செயலாகும்.
முன்னாள் நீதியரசர், ஊழலற்ற, அப்பழுக்கற்றதொரு சேவையைத் தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் பெரு விருப்புக் கொண்டதொரு நேர்மையான அரசியல்வாதி மட்டுமல்ல தமிழ்மக்களின் தேசிய உணர்வுகளைப் பிரதிபலிக்கக் கூடியதொருவர் வடமாகாண முதலமைச்சராக எங்களுக்கு வாய்க்கப் பெற்றுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திலுள்ள வடகிழக்கு இணைப்பு, தமிழர் தாயகத்திலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும், எமது மக்கள் மீளக்குடியமரத்தப்பட வேண்டும், தமிழ்மக்களுக்கென முழுமையானதொரு அரசியல் தீர்வு தேவை என்பதைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருபவர்.
இவ்வாறு தமிழ் மக்களின் நலனுக்காகப் பல்வேறு வழிகளிலும் குரல் கொடுத்து வடமாகாண முதலமைச்சர் ஊழல் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்தார் என்பதற்காக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவது மிக மிக அநாகரிகமானதொரு விடயம்.
ஈழத்தில் இனப்படுகொலை இடம்பெற்றிருப்பதாக வடமாகாண சபையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய வடமாகாண முதலமைச்சர் தனது கடமைகளைச் சரிவர நிறைவேற்றி வரும் நிலையில் அதற்கு மாறாக வடக்கு-கிழக்கு இணைப்பைக் கைவிட்டு, சமஸ்டி அரசியலமைப்பு முறைமையைக் கைவிட்டு இலங்கை அரசாங்கத்தின் சொல்லுக்குக் கட்டுப்பட்டுத் தமிழரசுக் கட்சி செயற்பட்டு வருகிறது.
தமிழரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களையும், தமக்கு உதவியாக அரச சார்பாகச் செயற்பட்டு வரும் இரு சிங்கள மாகாண சபை உறுப்பினர்களையும், மூன்று முஸ்லீம் மாகாண சபை உறுப்பினர்களையும் உள்ளடக்கி வடமாகாண முதலமைச்சருக்கெதிராக ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவதற்குத் தமிழரசுக் கட்சியின் தலைவர்களான சுமந்திரன், மாவை சேனாதிராஜா போன்றோர் முன்னின்று செயற்பட்டு வருகிறார்கள்.
அவர்களுடன் இணைந்த வகையில் தென்னிலங்கையின் இரு பிரதான கட்சிகளான ஐக்கியதேசியக் கட்சியும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், இணைந்து முதலமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்கின்றனரோ? என்ற சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.