நின்று நின்று போகும்
பேருந்து ஒன்றில் நிரம்பி
வழியும் கூட்ட நெரிசலினூடே
தனது பொம்மையை மட்டும்
நசுங்காமல் இறுக்கிப்பிடித்த
சிறுமியை நெருக்கியது
மனித கூட்டம்!
காலை வேலை காத்திருப்பில்
கடமையை முடித்து காசு பார்ப்பதற்காக
விரைகின்ற வேகத்தில்
யாருமே எதிர்பார்க்காத
நிகழ்வாய் அவசரங்கள்
நிதானிக்க கூட அவகாசமில்லை!
முன்னுக்குப்பின் முரணாக
எதிர்நோக்கும் எதிர்பார்ப்புக்களில்
ஒளிந்திருக்கும் ஆளுமையின்கீழ்
எல்லோரும் முகமறியா
பிணைப்பொன்றில் நிர்பந்திக்கப்பட்டு
வெளிவரவியலாத பணமென்ற
வேலிக்குள் அடைக்கப்படுகிறார்கள்!
இவ்வாறான நிகழ்வுக்குள்
சுமையாய் ஏற்றப்பட்ட சுமைதாங்கியினூடே
இன்னும் இறுக பிடித்திருந்தாள் பொம்மையை
இதையாவது உயிரோடு
காப்பாற்ற வேண்டுமென்று
உயிரற்ற பொம்மைக்கு
உயிர்கொடுக்கும்
உயிருள்ள பொம்மை!
– கோவை சசிக்குமார்