மாகாணசபை உறுப்பினர்களிடம் ஊடகங்கள் கேள்வி கேட்ககூடாது. அதற்கான அனுமதி ஊடகவியலாளர்களுக்கு இல்லை என ரெலோ அமைப்பின் செயலாளர் என். சிறிகாந்தா எச்சரித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ரெலோ கட்சியினரின் ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள ரெலோ கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் வடக்கு மாகாணசபையின் தற்போதைய நிலைமை தொடர்பாக நடைபெற்ற ரெலோவின் உயர்மட்ட அரசியல் குழுவின் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.
இந்நிலையில் ரெலோ கட்சியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களிடம் கேள்விகள் எதுவும் கேட்கக்கூடாதுஇ எந்தக் கேள்வியானாலும் நான்தான் பதிலளிப்பேன் என ஊடகவியலாளர்களை அக்கட்சியின் செயலாளரும் சட்டத்தரணியுமான சிறிகாந்தா எச்சரித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர் ஒருவர் மாகாணசபை உறுப்பினர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிட்ட போது என்.சிறிகாந்தா தனிப்பட்ட கருத்து அந்தக்கருத்து இந்தக்கருத்து என்று எதுவும் கிடையாது நான் தெரிவிக்கும் கருத்தை மட்டுமே நீங்கள் எடுக்க வேண்டும் என அவர் பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.