வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள கத்தோலிக்க மற்றும் இந்து மதத் தலைவர்களைச் சந்தித்து தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.
வடக்கு அரசியல் களத்தில் கடும் நெருக்கடியான நிலை தோன்றியுள்ள சூழலில், நேற்று நல்லை ஆதீனத்துக்கும், யாழ். ஆயர் இல்லத்துக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சென்றிருந்தார்.
நல்லை ஆதீன குரு முதல்வரையும், கத்தோலிக்க திருச்சபையின் யாழ். ஆயரையும் சந்தித்துப் பேச்சு நடத்திய முதலமைச்சர் விக்னேஸ்வரன் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கான காரணங்கள் மற்றும் தனது நிலைப்பாடுகள் குறித்து தெளிவுபடுத்தினார்.
இந்தச் சந்திப்புகள் தொடர்பாக கருத்து வெளியிட்ட போது, தற்போதைய அரசியல் கொந்தளிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு என்ன செய்யலாம் என்று நல்லை ஆதீன முதல்வர் கேட்டதாகவும், அதற்கு தாம், ஆளுனரிடம் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப் பெற்றால், மக்களின் கொந்தளிப்பு அடங்கும் என்று பதிலளித்ததாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.