”பார்வை ஒன்றே போதும்”
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆசிரியராக மட்டுமே இருந்து ஈழத்து சினிமாமீது இருந்த தீராத காதலால் ஈழத்து சினிமாவில் காலடி எடுத்து வைத்த புவிகரன் முதலில் எடுத்த பாடல் ”பள்ளிப்பட்டாம் பூச்சி” என்ற பாடலே. அதன் பின்னர் ஈழத்து சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை எடுத்து ஆழமானதொரு திருப்புமுனையை ஈழ சினிமாவுக்கு ஏற்படுத்தவேண்டும் என்ற வெறியுடன் தனது பாதையை மாற்றியமைத்திருக்கும் புவிகரனின் மற்றுமொரு படைப்பு இது.
ஈழ இந்திய கலைஞர்கள் கூட்டமைப்பில் உருவான முதல் குறும்படம் ”பார்வை ஒன்றே போதும்” சமூகத்தில் நிகழும் நடைமுறை விடயங்களை குறும்படங்களாக வெளிக் கொண்டு வருவதே குறும்பட இயக்குனர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய விடயமாகும். அந்த வகையில் தனது பொறுப்பினை சரியாக உணர்ந்து செயற்படும் புவிகரன் குறும்படத்தினை வெளிக் கொண்டுவரும் பொது சில தவறுகளை விட்டே செல்கின்றார்.
இந்த குறும்படத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட நடிக நடிகைகள் தமது நடிப்பை மிக சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தாலும் ஏனோ சில இடங்களில் சில நெருடல்கள். நண்பர்களாக வரும் இளைஞர்களின் குறும்பும் கிண்டலும் இன்றைய இளைய சமுதாயத்தை முன்னிறுத்தி இருப்பது நடைமுறை தத்துரூபம்.
”ஆயிசாவும் இருக்கா பாத்துக்கோ” மச்சி என்று கூறுவது நல்லதொரு நண்பனின் இதமான அக்கறை.
”விஜயகாந்த்” குரலில் மிமிக்கிரி கொண்டு வந்தது குறும்படத்திலும் ”மிமிக்கிரி நடிகர்கள்” பயன்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்தின் செயற்பாடு குறும்பட உலகிற்கு புதியதொரு அறிமுகம் என்றே சொல்ல வேண்டும்.
காட்சிபடுத்தப்பட்ட இடங்கள், ஒளிப்பதிவு என்பவற்றிக்கு மிகப்பெரியதொரு சபாஷ். குறும்படம் ஆரம்பிக்கும் போது மிக சிறப்பாக செய்யப்பட்ட டப்பிங் குறும்பட முடிவில் நாயகி தனது அண்ணனுடன் பேசும் போது திடீரென்று அதிரும் ஒலிக்கலவை கவனிக்கப்பட்டு இருக்க வேண்டும்.புகைக்கும் குணம் கொண்ட இளைஞர்களுக்கு அவர்களது குடும்ப உறுப்பினர்கள் புகைப்பதை விரும்பவில்லை என்று சொல்லாமல் சொல்லி நிற்கும் இந்த படத்தின் கருத்தை புகைக்கும் இளைஞர்கள் கருத்தில் கொள்வார்களா?
ஒரு பெண் தன்னை நோக்கி வரும்போது அநேகமான ஆண்களின் மனதில் அந்த பெண்ணை பற்றி ஏற்படும் தவறான சிந்தனையே இந்த நாயகனுக்கும் ஏற்படுகின்றது. காதலிக்கு துரோகம் செய்யாத காதலன் எண்ணத்தில் உயர்ந்து கொள்கின்றான்.காதல் உணர்வுகள் சிறப்பாக கொண்டுவரப்பட்டது போல தங்கையின் பாச உணர்வுகள் வெளிப்படுத்தவில்லை என்ற குறை ஏற்பட்டாலும் கல்லூரி கற்கும் ஒரு வாலிபனுக்கு சட்டென்று ஒரு இளம்பெண் தங்கை என்று தெரியவரும்போது எவ்வாறான உணர்ச்சியை பிரதிபலிப்பானோ அதையேதான் இந்த குறும்படத்தில் காட்ட முற்படுகின்றார் இயக்குனர் என்று திருப்திப்பட்டு கொள்ளத்தான் முடிகின்றது.
இசையில் சிறிதளவான சோர்வு நிலை உண்டு. பாடல் வரிகளை இலகுவாக புரிந்து கொள்ள முடிந்தாலும் பாடகர் அதனை இன்னும் சிறப்பாக பாடி இருக்கலாம் என்ற ஆதங்கம் எழுவதை தடுக்க முடியவில்லை. சில இடங்களில் டப்பிங்கில் கவனம் செலுத்தப்பட்டு இருந்ததால் இந்த குறும்படம் இன்னும் ஒரு வெற்றியை எட்டியிருக்கும். ஏற்கனவே வந்த படமான ”நிலவே முகம் காட்டு” என்ற படத்தில் சிறு மாற்றம் செய்யப்பட்டு உறுப்புதானத்தை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த குறும்படம் ஈழத்து சினிமாவில் இன்னுமொரு கதையம்சம் கொண்ட குறும்படம் என்றுதான் கூறவேண்டும்.
”சகாயமாதா” தயாரிப்பில் ஜோஸ்லின் ஜோ சிறந்ததொரு கதையை சினிமா உலகிற்கு தந்துள்ளார் என்றுதான் கூற முடிகின்றது.
பல முழுநீளப்படங்களை எடிட்டிங்க் செய்யும் சசிகுமார் தனது பணியை சிறப்பாகவே செய்திருக்கின்றார்.அறிமுக ஒளிப்பதிவாளர் அன்றேவ் சசிகுமாருக்கு நல்லதொரு வாய்ப்புகள் அமையும்போதே இன்னும் சிறப்பாக செயற்படவேண்டும் என்பதே எமது எண்ணப்பாடு.
சகாயமாதா தயாரிப்பு நிறுவனம் இன்னும் சிறந்த படைப்புகளை உருவாக்க ஈழத்து சினிமா சாதனையும் வேதனையும் விரும்பி நிற்கின்றது.
என்றும் அன்புடன்
– காவியா