சபை அமர்வில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை கைப்பற்றுவோம் என வட. மாகாண சபையின் உறுப்பினர் கேசவன் சயந்தன் சூளுரைத்துள்ளார்.
வட. மாகாணத்தில் காணப்படும் நெருக்கடி நிலை தொடர்பில் யாழில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தி வருகிறோம்.
அதன்படி வட. மாகாணத்திற்கான முதலமைச்சர் பதவிக்கு அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் வட. மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மாகாண சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் இவர்களின் ஒருவர் முதலமைச்சராக தெரிவுசெய்யப்படுவார் என்றும் குறிப்பிட்டார்.