கிரென்பெல் டவர் கொடிய தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கோரி லண்டனில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கென்சிங்டன், மத்திய லண்டன் வீதிகளிலும் டவுனிங் வீதியில் அமைந்துள்ள பிரித்தானிய உள்துறை அமைச்சு அலுவலகத்திற்கு வெளியிலும், லண்டன், கென்சிங்டன் நகர மண்டபங்களுக்கு வெளிப்புறமாகவும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
நேற்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டங்களில் ‘எங்களுக்கு நீதி வேண்டும்’, ‘ உங்களை எண்ணி வெட்கப்படுகின்றோம்’ போன்ற கோஷங்களை எழுப்பியவாறு நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், கென்சிங்டன் மற்றும் செல்சியா நகரசபை மண்டபத்திற்கு வெளிப்புறமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நகரசபை உறுப்பினர்களை வெளியில் வருமாறு கோஷமெழுப்பியபடி தானியங்கி கதவு வழியாக மேல்மாடிக்கு செல்வதற்கு முயன்ற போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகவும் தெரியவருகின்றது.
அதேவேளை டவுனிங் வீதி உள்துறை அமைச்சு அலுவலகத்திற்கு வெளியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும் கோஷமெழுப்பினர்.