கர்நாட மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் ஐந்து வயது சிறுமியை தேவதாசி பட்டம்கட்டி பாலியல் தொழிலில் தள்ளி விழா கொண்டாடிய சாமியார் உள்ளிட்ட மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவின் கர்நாடக மாநில அரசின் சட்டப்படி கடந்த 1982-ம் ஆண்டு தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. இருப்பினும், ரகசியமாக தேவதாசி முறை மாநிலத்தின் சில பகுதிகளில் இன்னும் புழக்கத்தில் உள்ளது.
இந்நிலையில், குல்பர்கா மாவட்டத்தில் உள்ள மாவின்சுர் கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் தேவதாசி பட்டம் கட்டி மதச்சடங்குகளை பெற்றோர் மற்றும் அந்த ஊரில் உள்ள கோவில் சாமியார் நடத்தியுள்ளனர்.
தற்போது பத்து வயதாகும் அந்த சிறுமி தேவதாசியாக வாழ்ந்து வருவதாகவும் குழந்தைகள் நல குழுவினருக்கு தெரியவந்தது.
இதையடுத்து, அந்த சிறுமியை தேவதாசி முறையில் இருந்து மீட்ட குழந்தைகள் நல அமைப்பினர் அளித்த புகாரின் பேரில், சிறுமியை தேவதாசியாக பட்டம்கட்டி பாலியல் தொழிலில் தள்ளிய அவரது பெற்றோர், இதற்கான சடங்கு சம்பிரதாயங்களுடன் விழா நடத்திய சாமியாரை பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.
மேலும், இதற்கு உடந்தையாக இருந்த இரு பள்ளி ஆசிரியைகள் மற்றும் அங்கன்வாடி பெண் பணியாளர் ஆகிய மூவரையும் பொலிசார் தேடி வருகின்றன