இன்றைய அரசியல் நெருக்கடியில் தலைமைப் பொறுப்பேற்கும் தமிழ் மக்கள்
இலங்கையின் வடமாகாணசபையில் உருவாக்கப்பட்டிருக்கும் ‘சூழ்ச்சியான’ அரசியல் நெருக்கடியிலிருந்து நிர்வாக அறத்தை மீட்டெடுத்து நிலைநிறுத்தும் எழுச்சியை தமிழ் மக்கள்முன்கையெடுத்து தலைமை ஏற்றுள்ளனர்.
மாகாணசபையில் உறுப்பினர் சிலரால் வெளிப்படைத் தன்மை, பொறுப்புக்கூறல், ஊழலற்ற மற்றும் சிறப்பான மக்களாட்சி போன்ற அரசியல், தலமைத்துவ நிர்வாக விழுமியங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்ட நிலையில் அவற்றைக் காக்கும் பொருட்டே மக்கள் களமிறங்கியுள்ளனர்.
வட மாகாணசபையில் இருக்கும் அமைச்சர்கள் சிலர் மீதான ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை பதினாறு மாகாணசபை உறுப்பினர்கள் முதல்வருக்கு எழுத்து வாயிலாகத் தெரிவித்து, விசாரணை நடத்துமாறு கடந்தவருடம் கோரியிருந்தனர்.
இவ்வாறான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டிய பொறுப்பும், அது தொடர்பான அறம் வழுவாத செயற்பாடும் வடமாகாண முதல்வருக்கான பொறுப்பாகும்.
இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கென விசாரணைக் குழு உருவாக்கப்பட்டது. விசாரணைகளின் நிறைவில் அந்தக் குழு சில பரிந்துரைகளை வழங்கியது. அந்த பரிந்துரைகளின் அடிப்படையில் முதல்வர் தான் எடுத்த முடிவை கடந்த 14ம் திகதி நடைபெற்ற விசேட மாகாண சபை அமர்வில் தெரிவித்தார்.
குற்றங்கள் உறுதிப்படுத்தப்பட்ட இரு அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமென்றும் குற்றங்கள் உறுதிப்படுத்தப்படாத மற்றைய இரு அமைச்சர்கள் மீது முறைப்பாடுகள் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வருவதால், தொடர் விசாரணைகள் நிறைவுறும்வரை பொறுப்புக்களுக்களிலிருந்து அவர்களை தற்காலிக ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் கோரியிருந்தார்.
இந்த முடிவுடன் சம்பந்தப்ட்ட மூவர் உட்பட சில மாகாண சபை உறுப்பினர்கள் முடிவு அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே வடமாகாணத்துக்கான ஆளுனரைச் சந்தித்தனர். முதலமைச்சரின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான கோரிக்கையை வடமாகாண சபாநாயகர் ஆளுனரிடம் கையளித்தார்.
இவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆளுனருடனான சந்திப்பும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் பற்றிய கோரிக்கைக்கும் மாகாணசபைக்கு வெளியில் உள்ள அரசியல் சக்திகளுக்குமான கூட்டும் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்ததும் வெளிப்படையாகவே தமிழ் மக்களால் உணரப்பட்டுள்ளது.
அரசியல் நேர்மையின் வழிப்பட்டு; ஊழல் அற்ற நிர்வாகத்தை மேற்கொண்டுவரும் முதலமைச்சரை வலுவான காரணங்கள் ஏதுமின்றி நீக்கக் கோரும் இந்த முறைகேடான செயற்பாடு மிக வேகமாக மக்களிடையே பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. செய்தி பரவிய ஓரிரு மணி நேரத்துக்குள்ளேயே வடமாகாணசபை முன்பும் முதல்வர் இல்லம் முன்பும் மக்கள் பெருமளவில் கூடினர்.
இந்தச் செய்தி தாயகத்தில் மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் அனைத்து தமிழரிடையேயும் வேகமாகப் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சரை நீக்கும் இம்முயற்சி வடமாகாண அமைச்சர்களை பாதுகாக்கும் நோக்கம் கொண்டது மட்டுல்லாது தமிழ் மக்களது நியாமான தீர்வுக்காக ஓங்கி ஒலிக்கும் குரலை இல்லாதொழிக்கும் அரசியல் முயற்சியுமாகும். மேலும் இம் முயற்சிகளும் அதன் பின்னணிகளும் இலங்கை அரசின் தமிழ் இனவழிப்பு வேலைத்திட்டத்தின் சதிவலைகளாகவும் தூண்டுதல்களாகவும் காணப்படுகிறது. இச் செயல் தற்செயலானதல்ல. பேரினவாதிகள் திரு விக்னேஸ்வரன் குறித்து அண்மைக்காலமாக வெளியிட்டுவரும் கருத்துகளை நாம் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.
இணக்க அரசியலுக்கும், பல உள்ளக வெளியக சக்திகள் இணைந்து கட்டமைக்கும் காய்நகர்த்தல்களுக்கும் முதலமைச்சரது நிலைப்பாடுகள் இடையூறாகவே இருக்கின்றன.
தமிழ் மக்களது ஒற்றுமையை சிதைத்து, அவர்களது அரசியல் வேணவாவை இல்லாதொழிப்பதுடன் ஏற்கனவே விதைக்கப்பட்டுள்ள சமூக சீரழிவுடன் லஞ்ச ஊழல் உள்ள சமூகமாகவும் தமிழ் சமூகத்தை சிதைக்க முற்படும் தரப்பினரது இம் முயற்சியை எதிர்த்து பரந்துபட்ட மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன.
அரசியல், தொழில்சார், சமூக அமைப்புகள் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கும் இன்நிலையில் வடகிழக்கு தமிழ் மக்களது சனநாயக வளர்ச்சியிலும், அவர்களது அடிப்படை அரசியல் உரிமைக்கான போராட்டத்திலும் காத்திரமான பங்கு வகித்துவரும் புலம்பெயர் சமூகமாகிய நாம் இன்றைய இச்சூழலிலும் தீர்க்கமான பங்கை வழங்க உறுதி பூணுவோம்.
இதன் அடிப்படையில் மக்களாட்சி விழுமியங்களை மீட்டெடுத்து நிலைநிறுத்தவும், எம் மக்களது விடிவுக்கான நீண்ட கால அரசியல் திரட்சியை பாதுகாக்கவுமென மக்களே தமது தலமையில் முன்னெடுத்துள்ள இப் போராட்டங்களை ஆதரிப்பதுடன், தமிழ் மக்களது நலன்களை முன்னிறுத்தும்
தலமையை பலப்படுத்துவதற்கும் எமது தார்மீக ஆதரவை வழங்குவது கனடியத் தமிழர் சமூக அமையத்தின் நிலைப்பாடாகும்.
அந்த வகையில், இத்திட்டமிட்ட நடவடிக்கைகளின் உச்சக்கட்டமாக முதலமைச்சரை பதவி விலக்கக்கோரி வடமாகாண ஆளுனரிடம் மனு கையளிக்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதோடு கீழ் வரும் விடயங்களையும் வலியுறுத்துகிறோம்:
- அரச ஆளுனரிடம் கையளிக்கப்பட்ட மனு உடனடியாக மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
- தமிழ் மக்களது நலன்களுக்கு விரோதமானவரையும் கூட்டுச் சேர்த்து அரச
- ஆளுனரிடம் சென்று வடமாகாண சபைக்கும், தமிழ் மக்களுக்கும் இழுக்கு விளைவித்தமைக்காக தொடர்புபட்டவர்கள் தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும்.
- அத்துடன் மக்கள் நலன் சார்ந்து நல்லாட்சி விழுமியங்களை முன்னிறுத்தும் வகையில் விசாரணை குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் முதலமைச்சர் முன்வைத்த தீர்ப்பினை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
கூடவே புலம்பெயர் சமூகமாக உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள சமூக அமைப்புக்களும் எம் மக்களது போராட்டத்திற்கான தங்களது ஒருமைப்பாட்டை தெரிவிக்குமாறு கோரி நிற்கின்றோம்.
தொடர்புகளுக்கு
647-848-7744