கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க ஆலயங்கள் மீது அண்மைக்காலமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படும் கருத்துக்களில் எவ்வித உண்மையுமில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
நாட்டில் இனவாதிகளினால் கிறிஸ்தவர்களின் ஆலயங்களும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக பல்வேறுபட்ட தகவல்கள் பரவி வருகின்றன. இது குறித்து நேற்றைய தினம் (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஒவ்வொரு தரப்பினரையும் தாக்குவதற்கும், தாழ்வாக கவனிப்பதற்கும் மதங்களை கைப்பொம்மையாக பயன்படுத்த வேண்டாம். மதங்கள் மனிதர்களிடையே ஒற்றுமைகளை வளர்க்கவேண்டுமே தவிர வன்முறைகளை ஏற்படுத்த இடமளிக்கக்கூடாது.
இவை குறித்து ஆரம்பத்திலேயே அவதானிக்கப்படுவதுடன், மேலும் அவை வளர்வதற்கும் இடமளிக்கக்கூடாது. இவ்வாறான இனவாதச் செயற்பாடுகளை மேற்கொள்வார்களானால் அது நாட்டுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்” என மல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் தெரிவித்துள்ளார்.