“ஒவ்வொருவரிடமும் காணப்படுகின்ற ஆளுமைப் பண்புகள், அதன் திறமைகள் என்பன சமூகத்திற்கு பயன்படுகின்ற போதே அவை முழுமையடைகின்றன” என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
நேற்று கிளிநொச்சி திருநகர் கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றத்தில் ஆளுமை விருத்திக் கல்விச் செயலமர்வும் அதன் அறிமுக நிகழ்வும் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கல்வி வளர்ச்சியில் இலங்கையிலேயே கிளிநொச்சி மாவட்டம் கடைசி நிலையில் உள்ளமை துரதிஷ்டவசமானது. பின்னோக்கிச் செல்லும் கல்வியை மேம்படுத்த வேண்டும். இந்த மாவட்டத்தின் கல்வி நிலை கீழ்மட்டத்தை நோக்கி செல்வதை காப்பாற்ற வேண்டும் என்கின்ற ஆர்வம் கல்வி சார்ந்த எல்லோருக்கும் உள்ளது.
ஆனால், அதனை எப்படி மாற்றியமைத்து முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும் என்பது தொடர்பாக எங்களுக்குள் நிறைய வேற்றுமைகள் காணப்படுகின்றன. அந்த வேற்றுமைகள்தான் தொடர்ந்தும் இந்த மாவட்டத்தின் கல்வியை மேம்படுத்த முடியாமைக்கு பிரதான காரணமாக காணப்படுகின்றது என நான் கருதுகின்றேன்.
கிராமப்புறங்களின் கல்வி நிலைமை மிகவும் மோசமாக காணப்படுகின்றது. ஆசிரிய வளப்பற்றாக்குறை இருக்கின்றது. மாகாணத்தின் பட்டியலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு திருப்திகரமான ஆசிரிய வளம் இருப்பதாக கூறப்படுகிறது. யுத்த பாதிப்புக்களின் பிரதிபலிப்பை சவாலாக எடுத்துக்கொண்டு நாம் முன்னேற வேண்டும்” என சந்திரகுமார் மேலும் தெரிவித்தார்.