வடமாகாணசபையின் மாண்பினையும் தமிழ் அரசியல் போக்கின் முன்மாதிரியாகவும் வடமாகாணசபையின் தற்போதைய அவைத்தலைவர் பதவியிலிருந்து சீ.வீ.கே.சிவஞானம் ராஜினாமா செய்யவேண்டுமென மாகாணசபை உறுப்பினர்களான கே.சர்வேஸ்வரன் மற்றும் விந்தன் கனகரட்ணம் ஆகிய இருவரும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
யாழ்.ஊடக அமையத்தினில் இருவரும் கூட்டாக இன்று செவ்வாய்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டினில் இப்பகிரங்க கோரிக்கையினை முன்வைத்திருந்தனர்.
அவையின் ஜனநாயன மாண்பினை தாண்டி தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களை தலைமை தாங்கி அழைத்துச்சென்று முதலமைச்சரிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையினை கையளித்தது அனைத்து தரப்பினால் அருவருக்கத்தக்கதாக பார்க்கப்படுகின்றது.
வழமையாக அமைச்சர்கள் தொடர்பிலோ ஏன் முதலமைச்சர் தொடர்பிலோ பிரேரணைகள் ,நம்பிக்கையில்லா தீர்மானங்கள் இருப்பின் அதனை அவைத்தலைவரிடமே கையளிக்கவேண்டும். அவர் அதனை சபை நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கி விவாதத்திற்கு விடுக்கவேண்டும்.அதுவே நடைமுறையாகும்.ஆனால் அதையெல்லாம் தாண்டி பதவியாசையினில் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களை தலைமை தாங்கி அழைத்துச்சென்று முதலமைச்சரிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையினை கையளித்துள்ளமை மன்னிக்கமுடியாததொன்றாகும்.அதே பிரேரணையினில் பிரதி அவைத்தலைவரும் ஒப்பமிட்டிருப்பதால் அவரும் பதவியினை துறப்பதே பொருத்தமானதாகும்.
இது தொடர்பினில் வடமாகாணசபையின் அனைத்து உறுப்பினர்களையும் இன்று மாலை சந்தித்து ஆராயவுள்ளோம்.பங்காளிக்கட்சிகளை தாண்டி தமிழரசுக்கட்சியினருடனும் பேசவுள்ளோம்.அவர்களிலும் பலர் தற்போதைய அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தினில் நடவடிக்கைகளினால் அதிருப்தியுற்றுளளனர்.தனது நடவடிக்கை எவ்வளவு அருவருக்கத்தக்கதென்பது சிவஞானத்திற்கு தெரியும். அதனாலேயே அவராக ராஜினாமா செய்யச்சொல்லி கோருகின்றோம்
முன்னதாக பேரவை தலைவர் மாற்றம் தொடர்பினில் முதலமைச்சரது சம்மத்தினை பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவித்த அவர்கள் புதிய அவைத்தலைவராக யாரை பிரேரிப்பதென்பது தொடர்பினில் இதுவரை முடிவெடுக்கப்படவில்லையென தெரிவித்தனர்.
இதனிடையே புதிய அவைத்தலைவராக கே.சிவாஜிலிங்கத்தின் பெயர் பேசப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.