மனிதம் இறந்து யுகங்கள் ஆச்சு
மனிதன் இருந்தால் கண்ணில் காட்டு
நடக்கும் திசையில் நடப்பவர் எல்லாம்
மனிதர் இல்லை பேய்கள்! பேய்கள்!
பெண்ணில் ஆசை மண்ணில் ஆசை
ஆசையொன்றே அழிக்கும் மிருகம்
கோவில் பூசை அரசியல் மேசை
எங்கும் பணமே மிருகம் மிருகம்
மரத்தின் அடியில் குறிகள் முளைத்தால்
அறுத்து எடுத்து அதையும் புணர்வார்
அழியும் உடலுள் ஆசையிருந்து
ஆட்டிவிப்பதை என்றும் உணரார்
பெண்ணின் உடலில் மண்ணில் கடலில்
விண்ணில் பொன்னில் எதுவும் இல்லை
கண்ணில் காணும் காட்சியில் மனிதா
உன்னில் பெரிதாய் ஏதும் இல்லை
கலவி என்பது உயிரின் ஜனனம்
அதையே வாழ்வாய் எண்ணும் மனிதா
கல்வி என்பது உயிரின் புனிதம்
அதையும் இன்றே உணர்வாய் மனிதா
அழகாய் உடலை எண்ணும் போகா
உள்ளே சென்றால் எல்லாம் நாறும்
நோயில் பிணியில் வீழ்ந்தபின் போகா
ஆசைகள் சொந்தங்கள் வேறாய் மாறும்
மரணம் ஒன்று அதுதான் உண்மை
மனிதர்கள் இங்கு பிறப்பது இல்லை
இரண்டு கால்களால் நடப்பவையெல்லாம்
ஆசையைச் சுமந்து அலையும் பிணங்கள்
ஆயிரம் பெயர்கள் எனக்குச்சூடி
ஆலையம் அமைக்கும் முட்டாள் மனிதா
அதர்மம் ஒன்றையே பணியாய் கொண்டு
உலகம் சிதைக்கும் மடமை மனிதா
கல்லை உடைத்து காற்றை கிழித்து
எல்லை கடந்து ஏறி….வருவேன்
தொல்லை அளிக்கும் முள்ளைச் சிதைக்க
வேளை பார்த்து நாடி…. வருவேன்
இருக்கும் திசையில் கிடக்கும் தடைகள்
அடித்து உடைத்து இலக்கை அடைவேன்
நடிக்கும் உலகின் வேசம் கிழித்து
பிறக்கும் சிசுவில் மனிதம் செய்வேன்
கொதிக்கும் குருதி கொதிக்க கொதிக்க
துடிக்கும் இதயம் உரக்கத் துடிக்க
நடக்கும் திசையில் வெடிகள் வெடிக்க
நடக்கும் யாகம் தீமை சிதைக்க
மரணம் என்பது என்றும் வரலாம்
எதற்குச் சொத்தை சேற்கிறாய் மூடா
நானே சர்வம் நானே மோட்சம்
போலிகள் துறந்து என்னிடம் வாடா
அனாதியன்