ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுடன், சுன்னாகம் குடிநீர்ப் பிரச்சனை தொடர்பாக பகிரங்க விவாதம் நடாத்த தான் தயாராக உள்ளதாக வைத்தியக் கலாந்தி முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
சுண்ணாகம் நீர் மாசடைதல் விடயத்தில் ஐங்கரநேசன் பல்தேசியக் கம்பெனியை காப்பாற்றுவதற்காக அதிகார துஷ்ப்பிரயோகத்தில் ஈடுபட்டதோடு போலி நிபுணர் குழுவை அமைத்து பொய் அறிக்கையை வெளியிட்டு அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்தும் மாசடைந்த நீரை பருகுவதற்கும் அதன் மூலமாக தமிழினத்தை அழிப்பதற்கும் முயன்றது இப்போது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த நிரூபணமான உண்மையை உறுதிப்படுத்துவதற்காக திரு ஐங்கரநேசனின் சவாலை ஏற்றுக் கொள்கிறேன்.
ஏற்கெனவே மல்லாகம் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்குக்கு முரண்படாத வகையில் எந்த நீதிமன்றத்திலும் சந்திப்பதற்கோ அல்லது தொலைக்காட்சியில் பகிரங்க விவாதத்துக்கோ தயாராக உள்ளேன் எனவும் அதில் தெரிவித்துள்ளார்.