முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முன்னிறுத்தி வடக்கில் கடந்த வாரம் எழுந்திருந்த ஆட்சியதிகார சர்ச்சைகள் அடங்கியிருக்கின்றன. எதிர்வரும் நாட்களில் புதிய அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் சில வார்த்தைப் பரிமாற்றங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கும் முதலமைச்சருக்கும் இடையில் நிகழலாம். ஆனாலும், அது பெரிய இழுபறியாகவோ பரபரப்பாகவோ நீள்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை.
எனினும், ‘வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியிலிருந்து விக்னேஸ்வரனை அகற்றுவது மட்டுந்தானா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உண்மையான நோக்கம், அதற்காகத்தான் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டதா?’ என்கிற கேள்வி தொடர்ந்து வருகின்றது.
“…முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்த இந்தத் தருணம் தவறானது என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். விக்னேஸ்வரன் என்கிற அடையாளத்துக்கு ஈடாக இன்னொரு நபரை தமிழரசுக் கட்சியினால், தற்போதுள்ள மாகாண சபைக்குள் முன்னிறுத்த முடியாது. அவைத் தலைவர் சிவஞானத்தை முதலமைச்சராக்க வேண்டும் என்கிற எண்ணப்பாடு ஏதும் எங்களுக்கு உண்மையிலேயே இல்லை. ஆனாலும், நாங்கள் ஒரு விடயத்தை முன்னெடுக்க முனைந்தோம். அதற்காக சில விடயங்களைச் செய்ய வேண்டியிருந்தது…” என்று விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதில் தீவிரமாக இயங்கிய மாகாண சபை உறுப்பினர் ஒருவர், இந்தப் பத்தியாளரிடம் கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்து ஆரம்பித்த இரண்டாவது நாள், அந்த மாகாண சபை உறுப்பினர் மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசிய அரசியலில் ‘தனி ஆவர்த்தனம்’ செய்ய வேண்டும் என்கிற நிலைப்பாட்டுக்கு வந்துவிட்ட தமிழரசுக் கட்சி, அதற்காக வெற்றி தோல்விகளுக்கு அப்பால் சென்று களத்தினைப் பரிசோதிப்பதற்கு தயாராகிவிட்டது. அதற்கான ஏற்பாடுகளின் போக்கிலேயே முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. ஏனெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து, வன்வலு (வன்வாத) தரப்புக்களை அகற்றம் செய்வது தொடர்பில் வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்குப் பின் கவனம் செலுத்தி வரும் தமிழரசுக் கட்சி, மென்வலு (மிதவாத) நிலைப்பாட்டோடு இருப்பவர்களை தங்களோடு தக்க வைப்பது தொடர்பிலும் ஆர்வம் கொண்டிருக்கின்றது.
சம்பந்தனும், சுமந்திரனும் விக்னேஸ்வரனை அரசியலுக்குள் அழைத்து வந்ததன் அடிப்படை நோக்கமே, கொழும்புக்கும் சர்வதேசத்துக்கும் மிதவாத முகமொன்றை வடக்கிலிருந்து முன்வைக்க வேண்டும் என்பதே. முதலமைச்சரும் தன்னுடைய பதவியின் ஆரம்ப நாட்களில் அளவுக்கு மீறிய மிதவாத முகத்தோடுதான் வலம் வந்தார். ஆனால், அவரினால் ஒரு ஒழுங்கிலும், கூட்டுறவோடும் செயற்பட முடியாத நிலையில், தனி ஆவர்த்தனம் செய்வது என்கிற நிலைக்குச் சென்றார். விக்னேஸ்வரன், தன் மீது யாராவது ஆளுமை செலுத்தத் தொடங்கிவிட்டார்கள் என்பதை புரிந்து கொண்டால், எளிதாக எரிச்சலாகி விடுவார். அப்போது, அவரால் அந்தச் சூழலுக்குள் இருக்க முடியாது. மாறாக, இன்னொரு தரப்புக்குள் தன்னை எந்தவித எண்ணப்பாடுகளும் இன்றி ஒப்புக்கொடுக்கத் தயாராவிடுவார். இது, அவரின் மூன்றரை ஆண்டுகால அரசியலைப் பார்க்கின்றவர்களுக்கு நன்றாகப் புரியும். குறிப்பாக, சுமந்திரன் தரப்போடு இணக்கமாக இருந்த அவர், சுமந்திரனின் ஆளுமை தன் மீது பிரயோகிக்கப்படுகின்றது என்பதை உணர்ந்ததும் விலகினார். அந்த இடத்தை அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு கொடுத்தார். அத்தோடு, அவரின் (வெளி) ஆலோசராக வலம் வரும் நிமலன் கார்த்திகேயனிடம் விட்டார். அதன் பெறுபோறுகளை எதிர்த்தரப்பு தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதை கடந்த வருடத்தில் அறிந்து கொண்டதும் அவர், ஐங்கரநேசன் பக்கத்திலிருந்தும் சற்று ஒதுங்கியிருக்க ஆரம்பித்தார். அது, ஐங்கரநேசன் தரப்பினை வெகுவாக கோபப்படுத்தியது.
ஒரு காலம் வரையில் சுரேஷ் பிரேமச்சந்திரனோடு மல்லுக்கட்டுவதன் மூலம் களத்தினைப் பரிசோதித்து வந்த தமிழரசுக் கட்சிக்கு, பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சுரேஷ் பிரேமச்சந்திரனைவிட தாக்கம் செலுத்தக்கூடிய ஒருவர் தேவைப்பாட்டார். அப்போதுதான், தன் நிலைப்பாடுகளினால் விக்னேஸ்வரன் சிக்கிக் கொண்டார். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினை தமது எதிரியாக முன்னிறுத்தி களத்தினைப் பரிசோதிக்கும் வேலைகளை தமிழரசுக் கட்சி ஏன் கைவிட்டது என்கிற கேள்வி இப்போது எழலாம். அதற்கு, தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர், “…பிரேதம் எடுக்கப்பட்டு விட்டது. இனி பிரேதத்தோடு மல்லுக்கட்டுவதில் பலனில்லை…” என்று முன்னொரு தடவை பதிலளித்திருந்தார்.
முதலமைச்சருக்கு எதிராக தமிழரசுக் கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்த போது, அது தமிழ் மக்களில் குறிப்பிட்டளவானவர்களை எரிச்சல் படுத்தியது. இந்தப் பத்தியாளரும் விசனம் வெளியிட்டு பேஸ்புக்கில் அரற்றினார். நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டதும், தமிழ் மக்களின் பிரதிபலிப்பு எவ்வகையானது என்பதை தமிழரசுக் கட்சியும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும், விக்னேஸ்வரனும், ஊடகங்களும் என்று பல தரப்புக்களும் அறியக் காத்திருந்தன. ஓரளவுக்க எதிர்பார்த்த மாதிரியே விக்னேஸ்வரன் மீதான அபிமானம் வெளிப்பட்டதும், அந்தப் பக்கம் ஒட்டிக் கொள்வது தொடர்பில் வெளித்தரப்புக்கள் ஆர்வம் கொண்டன. குறிப்பாக தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்பன.
தமிழரசுக் கட்சியோ தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பது போன்று காட்டிக் கொண்டிருந்தது. அதன்மூலமும் எதிர்வினைகளின் அளவு எவ்வளவு, உண்மையில் அதற்கான வலு இருக்கின்றதா?, என்று அறிய முற்பட்டது. அதுதான் இன்று நிகழ்ந்தும் இருக்கின்றது. அதாவது, விக்னேஸ்வரனுக்கு ஆதரவாகத் திரண்ட கூட்டத்தின் கோபம் அதிகபட்சம் எத்தனை நாட்களுக்கானது, அந்தக் கோபத்தினை எவ்வாறு தணிக்கலாம்?, என்பது பற்றியெல்லாம் கவனத்தில் எடுத்தார்கள். ஆனால், அந்தக் கோபம் சடுதியாக அணைப்படுவதற்கான ஏற்பாடுகளை தமிழ் மக்கள் பேரவையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஏற்படுத்திக் கொடுத்தன.
கடந்த வியாழக்கிழமை விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் திரண்ட நூற்றுக்கணக்கான இளைஞர்களைக் கண்டதும், தமிழ் மக்கள் பேரவைக்கு உள்ளூர சிலிர்ப்பு ஏற்பட்டுவிட்டது. அதன்போக்கில், வெள்ளிக்கிழமை கடையடைப்புக்கான அழைப்பை விடுத்தது. கடையடைப்புக்கான அழைப்பினை பேரவை விடுக்கும் போது, வியாழன் மாலை 05.00 மணியிருக்கும். மக்களை நோக்கி கடையடைப்பு என்கிற போராட்ட வடிவம் எந்தவித முன்னறிவுப்புக்களும் இன்றி திணிக்கப்பட்டது. இது, குறிப்பிட்டளவில் விசனத்தைத் தோற்றுவித்திருந்தது.
வெள்ளிக்கிழமை காலை நல்லூரில் கூடிய கூட்டம், முதலமைச்சரின் வாசல்ஸ்தலம் வரையில் ‘தமிழ் மக்களின் அரசியல் தலைமையை விக்னேஸ்வரன் ஏற்க வேண்டும்’ என்கிற கோரிக்கையோடு சென்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களில் பெரும்பான்மையானோர், கடந்த காலங்களில் கூட்டமைப்புக்கு வாக்களித்தவர்கள். அவர்கள், முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையால் உணர்ச்சிவசப்பட்டு தூண்டல் நிலையில் இருந்தவர்கள். அவர்களில் கோபத்தில் நியாயமும் இருந்தது. ஆனால், அவர்களின் கோபத்தை தமக்கு சாதாகமாகப் பயன்படுத்த முயன்று பேரவையும், முன்னணியும் அம்பலப்பட்டு போய் நின்றன. ஏனெனில், விக்னேஸ்வரனை நோக்கி ‘தேசியத் தலைவர்’ என்கிற அடையாளக் கோசத்தினை எழுப்பியதில் காட்டிய ஆர்வமும், அது சார் அபத்தமும் அரசியல் கேலிக்கூத்தாக வெளிப்பட்டது.
விக்னேஸ்வரன் அரசியலுக்கு வந்த குறுகிய காலத்துக்குள் பத்துக்கும் மேற்பட்ட தடவைகள், ‘விக்னேஸ்வரனின் தலைமையை ஏற்க தயார்’ என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்திருப்பார். ‘எழுக தமிழ்’ மேடைகளில் அவரின் கோசத்தோடு, சுரேஷ் பிரேமச்சந்திரனும் இணைத்து கொண்டிருந்தார். ஆனால், அரசியலில் தலைமையேற்பதற்கான எந்த ஆளுமையையும் வெளிப்படுத்தியிராத விக்னேஸ்வரன், அந்த அழைப்புக்களை தொடர்ச்சியாக புறந்தள்ளியே வந்திருந்தார்.
அந்த நிலையில், கடந்த ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ காலத்தில், விக்னேஸ்வரன் சம்பந்தனோடு சேர்ந்து தமிழ் மக்களுக்கு துரோகமிழைக்கின்றார் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டினார். முள்ளிவாய்க்காலில் விக்னேஸ்வரன் தலைமையில் வடக்கு மாகாண சபை நினைவேந்தலை நடத்தும் போது, கஜேந்திரகுமாரோ இன்னொரு இடத்தில் அஞ்சலி தீபமேற்றிவிட்டு வந்தார். ஆனால், அந்தச் சம்பவங்கள் நடந்து ஒரு மாதத்துக்குள்ளேயே, ‘தமிழரின் அரசியல் தலைமையை ஏற்க விக்னேஸ்வரன் வர வேண்டும்’ என்று அட்டை பிடித்துக் கொண்டு பேரணியில் நடந்தார். அதுவும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, நிராகரித்துவிட்ட ‘மாகாண சபை’ கட்டமைப்பின் முதலமைச்சர் பதவிக்கான இழுபறியை முன்னிறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில்.
இன்னொரு பக்கம், தமிழ் மக்கள் பேரவையின் செயற்திறன் இன்மைக்கு விக்னேஸ்வரனே முக்கிய காரணி என்று சொல்லிக் கொள்ளும் புத்திஜீவிகளும், அவர் தலைமையேற்க வேண்டும் என்கிற கோசத்தோடு சேர்ந்து நடந்தனர்.
கடந்த முப்பது வருடங்களாக அரசியல் கட்டுரைகளை எழுதி வரும் நிலாந்தன், “ஒரு மாற்று அணியை அவராக உருவாக்கத்தக்க ஒரு வாழ்க்கை ஒழுக்கம் விக்னேஸ்வரனுக்கு இல்லை. ஒரு கட்சியை அல்லது அமைப்பைக் கட்டியெழுப்பத் தக்க ஓர் ஆளுமை அவரல்ல. ஆனால் ஏனையவர்கள் ஒரு கட்சியைக் கட்டியெழுப்பி விட்டு அழைத்தால் அவர் தனக்குரிய ஆசனத்தில் போய் அமர்வார். மாகாண சபைக்குள்ளும் அவர் அப்படித்தான் அழைத்து வரப்பட்டார். தமிழ் மக்கள் பேரவைக்குள்ளும் அவர் அப்படித்தான் அழைத்து வரப்பட்டார்.” என்றிருக்கின்றார். அப்படிப்பட்ட ஒருவரை நம்பி கொடி பிடிப்பதற்குப் பின்னாலுள்ள இயாலாமைக்கான அரசியல் களத்தினைத் தான் தமிழரசுக் கட்சி இப்போது எதிர்பார்க்கின்றது. பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது.
‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், மாகாண சபையையும் விட்டு வெளியே போ!’ என்று தமிழரசுக் கட்சி முதலமைச்சர் விக்னேஸ்வரனை தள்ளிக் கொண்டிருக்கின்றது. மறுபுறமோ, முதலமைச்சர் பதவியை விட்டு வெளியே வந்து தங்களை தலைமையேற்று வழிநடத்த தமிழ் மக்கள் பேரவையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கோருகின்றன. ஆனால், இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு விக்னேஸ்வரனோ, மாகாண சபைக்குள் முதலமைச்சர் பதவியோடு இருப்பதையே விரும்புகின்றார்.
விக்னேஸ்வரன், முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட காலத்தில், வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் மிகுந்த அக்கறை செலுத்தப்பட வேண்டும் என்று கூறி வந்தார். ஆனால், அவர் பதவியேற்று குறுகிய காலத்துக்குள்ளேயே அதற்கான ஏற்பாடுகளைக் கைவிட்டு, மாகாண சபையை முடக்குவது தொடர்பில் கவனம் செலுத்தினார். இதன்போக்கிலேயே, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சட்ட பீடாதிபதி என்.செல்வக்குமாரன் உள்ளிட்டவர்களைக் கொண்டு கூட்டமைப்பு தயாரித்த நியதிச் சட்டங்கள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டன. மாகாண சபைகள் அதிகாரங்கள் அற்றவை என்பது தொடர்பில் யாரும் சொல்லிச் தெரிய வேண்டியதில்லை. ஆனால், அந்தக் கட்டமைப்பைக் கொண்டு போரினால் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கும் வடக்கில் செய்யக்கூடிய சிறிய பங்களிப்பையும் செய்யாது விட்டுவிட்டு, இன்றைக்கு அந்த கட்டமைப்பின் முதலமைச்சர் பதவியிலிருந்து இறங்க முடியாது என்று அவர் அடம்பிடிக்கின்றார்.
இவ்வாறான விடயங்களை வெளிப்படுத்த வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு, தமிழரசுக் கட்சிக்கு தொடர்ச்சியாக இருந்து வந்தது. அதன்போக்கிலேயே, நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்து, ஊடகங்கள் வழி நீண்ட விவாதங்களை செய்ய வைத்திருக்கின்றது. அதன்மூலம், மக்களை ஆரம்பத்தில் குழப்பினாலும், காலம் செல்லச்செல்ல தெளிய வைக்க முடியும் என்றும் நம்புகின்றது. அதைத்தான், தமிழரசுக் கட்சி மாகாண சபை உறுப்பினரின், “…நாங்கள் ஒரு விடயத்தை முன்னெடுக்க முனைந்தோம். அதற்காக சில விடயங்களைச் செய்ய வேண்டியிருந்தது…” என்கிற பகுதியும் சொல்கின்றது.