வடமாகாணத்தில் இடம்பெற்ற ஊழல், குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன் மற்றும் குருகுலராஜா ஆகியோரை அவர்களது பதவிகளைத் தியாகம் செய்யுமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பணிப்புரை விடுத்திருந்தார்.
இந்நிலையில். நேற்று முன்தினம் முதலமைச்சரின் இல்லத்திற்குச் சென்று வடமாகாண கல்வி அமைச்சர் தனது பதவி விலகல் கடிதத்தினை முதலமைச்சரிடம் வழங்கியிருந்தார்.
அக்கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது
கடந்த 14.06.2017 இல் நடைபெற்ற வடக்கு மாகாண சபை அமர்வில் தங்களால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்ட என்னையும். விவசாய அமைச்சராகப் பதவி வகித்த ஐங்கரநேசன் அவர்களையும் எமது பதவிகளைத் தியாகம் செய்து தாமாகவே பதவியிலிருந்து விலகுமாறு கோரியிருந்தீர்கள்.
இன்றுவரை எனது இராஜினாமாக் கடிதம் தங்களுக்கு வழங்க முடியாததையிட்டு மனம் வருந்துகின்றேன்.
இதேவேளைஇ என் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் யாவும் திட்டமிட்டு செய்யப்பட்டவை என்பதுடன் அதற்காக என்னை எவ்விதத்திலும் பொறுப்பாக்க முடியாது என்பதை உறுதியாக நம்புகிறேன்.
எனது தன்னிலை விளக்கத்தின் ஊடாக நான் குற்றமற்றவன் என்பதனை நன்றாகவே ஆதாரங்களுடன் விளக்கியுள்ளேன்.
தாங்கள் என்னுடைய இந்த தன்னிலை விளக்கத்தினைப் படித்திருக்கலாம். அல்லது மேலெழுந்த வாரியாக அதனைப் பார்வையிட்டிருக்கலாம்.
தன்னிலை விளக்கம் பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்டதன் பின்னர் பலரது கவனம் அவ்விளக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டு என் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் குற்றங்கள் அல்ல என்பதனை எனக்குத் தொலைபேசி மூலம் தெரிவித்திருந்தனர்.
நான் இராஜினாமாக் கடித்தத்தினை சமர்ப்பிப்பதனால் என் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் யாவற்றையும் ஏற்றுக் கொண்டது போலாகி விடும் என்கின்ற குற்றவுணர்வுடன் அமைச்சர் பதவியைத் துறக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகியுள்ளேன்.
தாங்கள் சட்ட ரீதியான சுயாதீனமான ஏற்றுக் கொள்ளக் கூடிய மேன்முறையீட்டுக் குழுவொன்றை நியமிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளீர்கள்.
இதனடிப்படையிலேனும் எனது தன்னிலை விளக்கத்தின் ஊடாக எனது குற்றத்தைக் கழுவி எனது மாசின்மையை எனக்கு ஆணை வழங்கிய மக்களுக்குத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன்.
சமரச முயற்சியின் ஊடாக தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் தளம்பல் நிலை ஒரு முடிவிற்குக் கொண்டுவரப்பட்டிருக்கும்.
இந்த வேளையில் எனது கட்சியின் எதிர்கால நலனுக்காகவும் சமரசத்தை ஏற்றுக் கொள்கிறவன் என்கிற முறையிலும் இன்றிலிருந்து வடக்கு மாகாண சபையின் கல்விப் பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்பதைத் தங்களிற்குத் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் குருகுலராசா குறித்த கடித்தத்தில் கூறியுள்ளார்.