சுடுகின்ற ஞாபங்களாய்
சில வந்து போகும்!
காலம் கழிந்த மௌனங்களாய்
சிலதை மறைக்கவும் தோன்றும்!
தூரத்தில் தெரியும் நட்சத்திரமாய்
சில கற்பனைகள் மின்னி மறையும்!
கடந்து போன கனவுகளும்
மின்னலாய் வந்து போகும்!
மனதோடு மறையாத நினைவுகள்
நதிகள் சங்கமிக்கும் கடல்போல!
துள்ளித்திரிந்த துள்ளல்கள்
புல்வெளி கண்ட மான் போல!
இவையெல்லாம் வாழ்க்கையெனும்
கடலில் குதிக்கும் வரைதான்!
பின்பு வாழ்க்கை கடலில்
முத்தெடுப்பவர் சிலபேர்!
மூழ்கிப்போவோர் பல பேர்!
இலக்கணம் தெரிந்து மொழி
பேசும் புதுமை போல!
வசந்தம் தெரிந்து வாழ
பழகும் மழலை குணமாய்
சிரித்துவாழும் வாழும்
வாழ்க்கை சில நாட்கள் மட்டுமே!
வாழும் நாட்கள் முழுவதும்
வசந்தங்களை மட்டும்
வசந்தமாய் மலர்விக்க
மனிதம் படும் பாடுதான்
நிம்மதியின் முதல் தொடக்கம்!
இதில்
வெற்றிகொண்டவர்க்கு மட்டும்
புன்னகை மலர்கிறது!
தோற்றவர்க்கு போலியாய்
புன்னகை பூக்கிறது
காகித மலர்களாய்!
கசங்கி விடும் வாழ்க்கை
வர்ணமிழந்த ஓவியமாய்
வறுமையின் தேடல்கள்
பிஞ்சு மனங்களில்
கருகிப்போன கனவுகளும்
கற்பனைகளும் கண்ணீர் விடும்!
எதிர்காலம் எதிர்நோக்கும்
வினாக்களுக்கு விடைதேடச் செல்லும்
கணப்பொழுதுகளில்
தன்னிலை மாறிப்போகும்!
அப்போ
அவனுக்கு விதி அவ்வளவுதான்
சமூகம் முற்றுப்புள்ளி வைத்திடும்!
தன்னை எதிர்நோக்கி காத்திருக்கும்
தன் பிஞ்சு மழலைகள் பசியினூடே
உறங்கும் தருணம்
உறைய வைக்கும் சோகங்களே!
– கோவை சசிக்குமார்