தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் உதயன் நாளிதழ் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த 22.06.2017ஆம் ஆண்டு வெளிவந்த உதயன் நாளிதழில் ‘விக்கி முதலமைச்சராக ஈபிஆர்எல்எவ் எதிர்ப்பு’ என முன்பக்க நாளிதழில் செய்தி வெளியிட்டிருந்ததுடன் இது தொடர்பாக தன்னைத் தொடர்புகொள்ள முயற்சித்தும் தனது தொடர்பு கிடைக்கவில்லையெனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிவசக்தி ஆனந்தன் தனது முகநூலில் தெரிவித்திருப்பதாவது
‘என்னைத் தொடர்புகொள்ள முயற்சித்ததாகத் தெரிவித்திருப்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. மேலும் செய்தி பாராளுமன்றக் குழுக் கூட்டம் தொடர்பானது. எனவே என்னைத் தொடர்பு கொள்ள முடியாவிட்டாலும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டறிந்து கொண்டிருக்க முடியும்.
இதில் மற்றொரு சிறப்பம்சம் அந்தப் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியரான சரவணபவன் நான் உரையாற்றியபோது கூட்டத்தில் சமூகமளித்திருந்தார். அவரிடம் கேட்டாவது செய்தியை ஊரிஜிதப்படுத்தியிருக்க முடியும். மேலும் செய்தியைக் கொடுத்தவர் யார் என்பது குறித்து எத்தகைய தகவலும் வெளியிடப்படவில்லை. இதன் மூலம் செய்தியின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகிறது.
அறிந்தோ அறியாமலோ உதயன் பத்திரிகை ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்தியுள்ளது. இதுவரை காலமும் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக்கூட்ட விபரங்களை ஈபிஆர்எல்எப்தான் ஊடகங்களுக்குத் தெரிவிக்கிறது என்ற குற்றச்சாட்டு எம்மீது சுமத்தப்பட்டிருந்தது. இன்று உதயன் அவசர அவசரமாக முற்றிலும் உண்மைக்கு மாறாக திரிபு படுத்திய ஒரு செய்தியை வெளியிட்டதன் மூலம் அந்தக் கருமத்தைத் தானே செய்துவந்துள்ளமை நிரூபணமாகியுள்ளது.
பொதுவாக கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் விடயங்களை பத்திரிகைகளுக்கு தெரிவிப்பதில்லை என்பது மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. எப்பொழுது தமிழரசுக் கட்சி தன்னிச்சையாகச் செயற்படத் தொடங்கியதோ அன்றிலிருந்து யாராவது ஒருவர் செய்திகளை முந்திக்கொண்டு ஊடகங்களுக்குத் தெரிவிப்பது தொடர்கிறது. இந்த விடயத்திலும் நாம் உட்கட்சி விவகாரத்தை கட்சிக்குள்ளேயே தீர்ப்பதற்கு முயற்சித்தோம்.
உதயன் உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டதன் விளைவாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கியமான விடயங்களை ஊடகத்திற்கும் அதன் வாயிலாக மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது எனத் தெரிவித்தார்.