வனத்திலிருந்து வரும் இளைஞன் நம் உலகுக்குள் நுழைந்தால், அவன் காதலில் விழுந்தால் அதுவே ‘வனமகன்’.
அந்தமான் அருகில் உள்ள பூர்வகுடிகளை விரட்டி அடித்துவிட்டு வின்டு மில் கட்ட ஒரு கார்ப்பரேட் நிறுவனம் திட்டமிடுகிறது. அதற்குத் துணை போகும் காவல்துறை அந்த பழங்குடி மக்களை அப்புறப்படுத்துகிறது. இதனால் பாதிக்கப்படும் ‘வனமகன்’ ஜெயம் ரவி ஒரு எதிர்பாரா விபத்தால் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார். புதிய உலகத்துக்குள் வரும் அவர் தன்னை அங்கே பொருத்திக் கொள்ள முடியாமல் இருக்கிறார். அவர் பிறகு அங்கே ஒத்துப் போகிறாரா, காதல் என்ன ஆகிறது, தன் மக்களை சந்தித்தாரா, அவருக்கு ஏற்படும் இழப்புகள் என்ன என்று ‘வனமகன்’ திரைக்கதை விரிகிறது.
‘வனமகன்’ மூலம் நம் அன்பு, நேயம் என சில உணர்வுகளை நினைவூட்டி நம் உள்ளங்களை கொஞ்சம் அசைத்துப் பார்க்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் விஜய்.
கதாபாத்திரத்துக்கேற்ற உழைப்பை உண்மையாகக் கொடுத்திருக்கிறார் ஜெயம் ரவி. அதிர்ந்து பேசும் வசனங்கள் இல்லை. சொல்லப்போனால் அவர் பேசும் வார்த்தைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால், பார்வையால், சைகையால் தன் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷம், மரம் விட்டு மரம் தாவும் லாவகம், பிரச்சினை கண்டு பொங்கும் குணம் என நாயகனுக்கான அனைத்து அம்சங்களையும் பூர்த்தி செய்கிறார்.
அறிமுக நடிகை சயிஷா நன்றாக நடனம் ஆடுகிறார். கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை குறையில்லாமல் வழங்கியிருக்கிறார். ஜெயம் ரவிக்கு பயிற்சி தரும் சில தருணங்களிலும், அன்பை உணரும் சமயங்களிலும், புலி மீதான பதற்றத்தையும், பயத்தையும் மிகையில்லா நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
‘கூகுள் மேப் மாதிரி ஈகிள் மேப்பா’ என கேட்டு பல இடங்களில் நகைச்சுவையால் தம்பி ராமையா தன்னை நிரூபிக்கிறார். பிரகாஷ்ராஜ் வழக்கம் போல நடிப்பால் கவர்கிறார். வேல ராமமூர்த்தி, சண்முகராஜா, வருண் ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.
காட்டின் ஒட்டுமொத்த அழகையும், பரந்து விரிந்த பசுமைப் பகுதிகளையும் திருவின் கேமரா கண்களுக்குள் கடத்துகிறது. ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் டேம் டேம் பாடல் ரசிக்க வைக்கிறது. யம்மா அழகம்மா பாடலும், பச்சை உடுத்திய காடு பாடலும் காட்சிகளின் விரீயத்தை தளர்த்தி விடுகின்றன. ஹாரீஸின் பின்னணி இசை சில இடங்களில் முந்தைய படங்களின் சாயலை நினைவூட்டுகின்றன. ஆண்டனி இரண்டாம் பாதியின் சில இடங்களை இழுத்தடிக்காமல் கத்தரி போட்டிருக்கலாம்.
கார்ப்பரேட் சதித் திட்டம், காட்டின் வளம், பெருமுதலாளிகளின் நடவடிக்கை, வனமக்களின் மாசு மருவற்ற தூய உலகம் ஆகியவற்றை விஜய் பதிவு செய்த விதம் பாராட்டுக்குரியது. ஜெயம் ரவியின் வருகைக்குப் பிறகு கதாநாயகிக்கு ஏற்படும் மாற்றங்களை வலுவாக காட்சிப்படுத்தி இருக்கிறார். வனமக்களின் மொழியைக் கூட சிரமமில்லாததாக காட்யிருப்பது ஆறுதல்.
இரண்டாம் பாதியில் வரும் சில கிராபிக்ஸ் காட்சிகள் மட்டும் சரியாகக் கையாளப்படவில்லை. ஜெயம் ரவியுடன் சயிஷா காதலில் விழும் காட்சிகள் நம்பும் படியாக இல்லை.
இதுபோன்ற சிற்சில காரணங்களைத் தவிர்த்துப் பார்த்தால் அன்பின் அடர்த்தியை, இயற்கையின் மகத்துவத்தை சொன்ன விதத்தில் ‘வனமகன்’ வசீகரிக்கிறான்.