புதிய அரசியலமைப்பில் வடக்குக் கிழக்கு இணைப்பு சாத்தியப்படாது எனவும், தமிழ் மக்களின் நிலை தற்போது பலவீனமாக உள்ளதால் தருவதை வாங்கிக்கொண்டு, ஜனநாயக ரீதியில் அடுத்த கட்டத்துக்கு நகரவேண்டுமென தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோகணேசன் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது செவ்வியில் தெரிவித்திருப்பதாவது, முழுப் பாராளுமன்றமும் இப்போது அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டுள்ளது. வழிகாட்டல் குழுவில் 21 அங்கத்தவர்கள் உள்ளனர். அதில் நானும் உள்ளேன். அதன் தலைவராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளார்.
இன்னும் இரண்டு வாரத்திற்குள் புதிய அரசியலமைப்புக்கான தொகுப்பு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதன்படி வடக்குக் கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை. அதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நன்கறிவார்.
எனது நிலைப்பாடு என்னவென்று கேட்டால் நான் சொல்வேன், வடக்குக் கிழக்கு இணைப்பு , சமஷ்டி முறையிலான ஆட்சி, மத சார்பற்ற நாடாக இலங்கையைக் கொண்டுவரவேண்டுமென்பதே என்னுடைய நிலைப்பாடு. ஆனால் இது மூன்றுமே நடைபெறப் போவதில்லை.
இதன் யதார்த்தமாகத்தான் கூட்டமைப்பினர் உள்ளனர். இதனை அடிப்படையாக வைத்து கூட்டமைப்பையோ, சம்பந்தனையோ குறைகூறுவதில் நியாயம் இல்லை. ஏனென்றால் சம்பந்தனும் முயற்சி எடுத்துக்கொண்டுதான் இருக்கின்றார்.
ஆயுதப் போராட்டம் தோல்வி அடைந்ததன் பிற்பாடு தமிழர்களின் நிலை பலவீனமாக இருக்கின்றது. ஆகையால் தருவதை வாங்கிக்கொண்டு ஜனநாயக ரீதியில் தொடர்ச்சியாகப் போராடுவோம் என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.