முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்றொழிலாளர்கள் மீது கடற்படையினர் தொடர்ச்சியாக தாக்குதல் மேற்கொண்டு வருவதால் மீனவர்கள் கடலுக்குப் போவதற்கு அச்சமடைவதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்தலைவர் அ.மரியராசா தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர்கள் மீது வேண்டுமென்றே கடற்படையினரின் படகொன்று மோதியதில் மீனவர்களின் படகு ஒருபக்கம் உடைந்தநிலையில் இரு மீனவர்களும் நீந்திக் கரையை வந்தடைந்தனர்.
ஏற்கனவே மீன்பிடியில் ஈடுபட்டிருந்த கடற்தொழிலாளர்கள் தாம் மீன்பிடிப்பதை கடற்படையினருக்கு தெரியப்படுத்தியதாகவும் எனினும் வேண்டுமென்றே வேகமாக விசைப்படகை செலுத்தி கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் பல தடவைகள் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருக்கும்போது கடற்படையினர் வேண்டுமென்று வந்து மிரட்டுவதாகவும், தமது படகுகளால் மீனவர்களின் படகுகளுடன் மோதி சேதத்திற்குள்ளாக்குவதாகவும் கடற்றொழிலாளர்கள் சமாசத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும்அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடற்றொழிலாளர்களை காக்கவேண்டிய கடற்படையினர் அவர்களை மோதிவிட்டு தப்பியோடுவதாகவும், இதனால் தொழிலாளர்கள் கடலுக்குச்செல்ல அச்சமடைவதாகவும் தெரிவித்துள்ளார்.