2008 ஆம் ஆண்டின் இறுதி நாட்களை தொட்டிருந்தது காலம்.அன்றைய ஒரு மாலைப் பொழுதில் தான் கிளிநொச்சி மண்ணில் இருந்து எமக்காக குறிக்கப்பட்டிருந்தது இடப்பெயர்வுக்கான நாளிகை. அந்த கிரவல் வீதிகளில் ஓடவேண்டிய நிலை. அதுவரை நாட்களும் இடப்பெயர்வுகளை இழப்புக்களை எமது மக்களின் வலிகளை தாங்கி தாங்கி மரத்துப்போன இதயத்துக்கு மீண்டும் ஒரு பெரும் இடப்பெயர்வை காண்பதற்கு சக்தியில்லாத நிலை எழுந்த போதும் எம் மண்ணில் சிங்களத்தாலும் பல வஞ்சக நாடுகளாலும் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த இறுதி யுத்தம் என்ற கொடிய இனவழிப்பை தாங்கியே ஆக வேண்டும் என்ற கொடுமை கண்முன்னே விரிந்து இருந்தது. நாங்கள் எதையும் தாங்கும் நிலையை பெற்றே இருந்தோம் கண் முன்னே உறவுகளின் சாவுகளைக் கண்டு அவர்களின் வலிகளை கண்டு வாழ்வின் உச்ச நிலைக்கு சென்றவர்கள் நாம். அதனால் நாங்கள் தளர்ந்து போகவில்லை. இறுதி மூச்சு வரை நிலைத்து நிற்கவே ஆசைப்பட்டோம். அதனால் தான் எம் வலிகளை நாம் எமக்கான மருந்தாக்கினோம்.
அந்த காலம் முறிகண்டி நோக்கி சிங்களத்தின் படைகள் நிலைப்படுத்தப்பட்டிருந்தன. மறுபக்கம் பரந்தனை கைப்பற்றும் நோக்கில் சிங்களம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. நாம் இவை இரண்டுக்கும் இடையில் கிளிநொச்சியில் இருந்தோம். அப்போது கிளிநொச்சியை கைப்பற்றும் அதீத தீவிரத்துடன் சிங்களம் மும்முனை தாக்குதல்களை செய்து எம்மவர்களின் சண்டையணிகளுடன் முட்டிக்கொண்டிருந்தது. மக்கள் நிலைமையை புரிந்து கிளிநொச்சி விட்டு நகரத் தொடங்கி இருந்தனர். நானும் அதில் ஒருவன்..மக்களோடு மக்களாக நாமும் ஓடிக்கொண்டிருந்தோம் வரும் செல்களுக்குள்ளும் வான் தாக்குதல்களுக்கும் எங்கள் உயிர்களை காத்துக் கொண்டு. அப்படியான ஒரு மாலைப்பொழுது திடீர் என்று வானத்தில் பெரும் இரைச்சல். கிளிநொச்சி நகரம் அதிர்ந்தது. தொடர்ந்து ஆறு ஏழு வான்குண்டுகள் நிலத்தில் கொலைவெறித் தாண்டவம் ஆடின. அவசரமாக அந்த இடத்தை நோக்கி ஓடுகிறோம்
அங்கே ஒரு குடும்பமே சிதைந்து போய் கிடந்தது.
155 ஆம் கட்டை என்ற இடம் அது. அருகில் ஒரு உழவியந்திரம் எரிந்து கொண்டிருந்தது. அருகில் இரு ஆண்கள் சிதைந்து கிடந்தார்கள். அதை தாண்டி ஒரு வீடு எரிந்து கொண்டிருக்கிறது. அருகில் இருந்த வீடுகளும் சிதைந்து கிடந்தான. அவை வீடுகள் இல்லை வெறும் தறப்பாள் கொட்டகைகள் அதற்குள் இருந்து ஒரு குழந்தை வீரிட்டு அழுது கொண்டிருக்கிறது. நாங்கள் அழுகை சத்தம் கேட்டு அங்கே ஓடுகிறோம். தாய் என்று நினைக்கிறேன் தலையின் பாதி அளவை காணவில்லை. உடலில் பல பகுதிகளை காணவில்லை. ஒரு பெண் சிதைந்து போய் கிடந்தாள். அவளருகில் அந்த குழந்தை வீரிட்டு அழுது கொண்டு இருந்தது. குழந்தைக்கு சிறு காயங்கள். குழந்தையை தூக்கி காயங்களை பரிசோதித்த போது இரு பெண்கள் ஓடி வருகின்றனர். ஐயோ என்னோட பிள்ளை இப்பிடி சிதைந்து போய் கிடக்கிறாளே….” வந்த அந்த மூத்த பெண் இறந்து கிடந்த பெண்ணின் தாயாக இருக்கலாம். அவள் தன பிள்ளை இறந்து கிடந்த துயரம் தாங்காது சத்தமாக அழுதாள். சொன்னால் கேட்டியளே வட்டக்கச்சி பக்கம் போவம் போவம் என்று எத்தின தடவை கேட்டன் ஐயோ இப்பிடி செத்து போறதுக்கே நாளைக்கு போவம் என்று மறுத்தாய். ஏன்டா ராசாத்தி… அவள் அழுது கொண்டே இருந்தாள். மற்றவள் குழந்தையை எம்மிடம் இருந்து பறித்துக்கொண்டு மருத்துவமனை நோக்கி ஓடுகின்றாள். வேறு யாரையும் அந்த இடத்தில் காணவில்லை. எல்லோரும் தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து ஓடி இருக்கலாம். மறுபடியும் தாக்குதல் நடக்கலாம் என்ற பயத்தில் அந்த பிரதேசத்துக்குள் வராது போயிருக்கலாம். அங்கொன்றும் இங்கொன்றுமாக எமது மக்கள் செத்துக் கிடந்ததையே நாங்கள் கண்டோம்.
அத்தோடு அருகில் இன்னும் பலர் இறந்தும் காயப்பட்டும் இருந்ததை நாம் காண்கிறோம்.
எமக்கு அந்த காட்சிகளை பார்த்து அழுகை வரவில்லை மனம் தளரவில்லை எம் மக்கள் என்ன பாவமிழைத்தார்கள்? தமக்கான சுதந்திர நாடு ஒன்றினை தானே கேட்டார்கள். அதுவும் எமது நாட்டைத்தானே கேட்டார்கள். இன்னொரு அந்நிய இனத்தோடு நாம் அடிமைகளாக வாழ முடியாது. தனித்துவமான தன்நிறைவான தமிழீழத் தாயகத்தை தானே கேட்டார்கள். அதற்காக அவர்கள் கொடுத்த விலைகள் பெறுமதியற்றவை. ஒரு மனிதன் தனது இறையாண்மையை பாதுகாக்க அந்த நாட்டில் இடமில்லை எனில் தனித்து செல்வது தானே சிறந்தது, இது ஏன் இந்த வல்லாதிக்க சக்திகளுக்கு புரியவில்லை எதற்காக விடுதலைக்காக போராடிய ஒரு இனத்தின் கருவையே சிதைத்து இனத்தையே அழிக்கிறார்கள். வினா எழுந்தாலும் அந்த நேரம் அதற்கான விடை கிடைக்கவே இல்லை.
ஒரு இளைஞன் தொடை அளவில் கால் ஒன்றை இழந்து இரத்தம் வெளியேறிக் கொண்டிருக்க துடித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு இரத்தம் அதிகமாக வெளியேறிக் கொண்டிருந்தது. எம்மால் அவனுக்கு முதலுதவி செய்ய முடியவில்லை இரத்தப் போக்கு நிறுத்தப்பட முடியாததாய் அதிகரித்திருந்தது. அந்த வீட்டுக்குள் இருந்த எரியாது தப்பித்து கிடந்த சாரம் மற்றும் பெட்சீட் போன்றவற்றை அவனின் காலில் வைத்து கட்டுகிறோம். அவன் அரைமயக்கத்தில் இருந்தான்.
என்னால் அவனைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை இல்லாது இருந்தது ஆனாலும் முயன்றேன். அவனைத் தூக்கி கொண்டு வீதிக்கு வந்த போது வந்து கொண்டிருந்தான் இயக்க வாகனம் ஒன்றின் உதவியோடு மருத்துவமனை அனுப்பி வைத்தோம். மீண்டும் திரும்பி அந்த இடத்துக்கு வந்த போது அந்த இடத்தில் இருந்தா உழவியந்திரத்துக்கு பின்பக்கமாக மெதுவாக முனகும் சத்தம் கேட்டு ஓடிச்சென்ற போது இன்னும் ஒரு இளைஞன். நான் நினைக்கிறேன் அந்த குழந்தையின் தந்தையாக இருக்க வேணும் ஏனெனில் அவன் முனகிய சத்தத்தில் தனது பிள்ளையை தேடியது புரிந்தது. எம்மைக் கண்டு அண்ண என் பிள்ளை அவன காப்பாற்றுங்கள் என்று முனகுவதே கேட்டது.
சிறிது நேரத்தின் முன் தனது மனைவியிடம் தேநீர் வாங்கி அருந்தி இருப்பான் தனது மகனை தூக்கி தன் மடியில் வைத்து கொஞ்சி இருப்பான். தனது தந்தையை அண்ணனை அன்பாக நேசித்து அவர்களுடன் பேசி இருப்பான். இப்போது அனைவரையும் இழந்து. அநாதியனாக தனது உயிரைக் கையில் பிடித்தது கொண்டிருந்தான். “அண்ண பிள்ளைக்கு ஒன்றுமில்ல நீங்கள் பயப்பிடாதீங்க” நான் கூறிக் கொண்டு அவனது காயத்தை பார்க்கிறேன். அவன் கட்டி இருந்த சாரம் முழுவதும் இரத்தத்தால் தோய்ந்திருந்தது. கால்களில் தான் காயம் என்று நினைத்து தூக்கிய போது அவனது ஆணுறுப்பு அறுபட்டு அதில் இருந்து குருதி பெருகுவதை கண்டேன். அவனுக்கு எந்த சிகிச்சையை அழிக்க அந்த இடத்தில் எந்தத் துணியை வைத்து இரத்தத்தினை கட்டுப்படுத்த? எனக்கு அவனை தூக்கி கொண்டு அப்பிடியே செல்வதை தவிர வேறு வழி தெரியவில்லை. அருகில் நின்ற என் நண்பனை அழைத்துக் கொண்டு உடனடியாக மருத்துவமனை சென்றோம். மருத்துவர்கள் அவனைப் பொறுப்பெடுக்கிறார்கள்.
““டொக் ( மருத்துவரை நான் டொக் என்று அழைப்பது வழமை )கன சனமா இப்ப நடந்த கிபிரில… ஓமடாப்பா கிட்டத்தட்ட பத்துக்கு மேல அதில ஒரே குடும்பத்தில எட்டு. கனபேர் காயம். எங்கட சனம் பாவமடா… அதுகள் என்ன செய்ததுகள் இந்த சிங்களவனுக்கு? எங்களோட மோதட்டும் இதை விட்டு சனத்துக்கு எதுக்குடா அடிக்கிறாங்கள். அவர் கூறிக் கொண்டு சிகிச்சை அறையை நோக்கி நகர்கிறார் நாங்கள் மீண்டும் அந்த இடத்துக்கே செல்கிறோம் வேறு யாரும் இருக்கலாம். காயத்துடன்…. அல்லது இறந்திருக்கலாம்.
மனம் கனத்துக் கிடந்தது. அப்போது தான் அந்த காட்சி… ஒரு ஆண் இறந்து கிடந்தார். அவர் கைகளில் சோற்றுப் பருக்கைகள் இரத்தம் தோய்ந்து கிடந்தன. அருகில் சோற்றுத் தட்டு சிதறிக் கிடந்தது. அவர் வளர்த்த நாய் என்று நினைக்கிறேன் அவரது காலடியில் செத்துக் கிடந்தது. அந்த மனிதன் தான் விரும்பிய உணவை சமைத்து பசியாற அப்போது தான் அமர்ந்திருப்பார் உண்ட சோறு தொண்டைக்குள் போகும் முன்னே சிங்கள கயவர்கள் அவரை சிதைத்த கோலத்தை பார்க்க முடியாது தவிக்கிறோம் நாம். மச்சான் என்ன கொடுமைடா இது? என் நண்பன் வினவுகிறான். விழிகள் கலங்குகின்றன கால்கள் அந்த இடத்தை விட்டு நகர மறுக்கிறது. அந்த இடத்தை ஒரு முறை சுற்றிப் பார்க்கிறோம் அங்கே சிலர் இறந்தவர்களை தூக்கி செல்கின்றனர். காயமடைந்தவர்கள் முழுமையாக அனுப்பப்பட்டதை உறுதிப்படுத்திவிட்டு நாம் நகர்கிறோம் அப்போது….
கவிமகன்
25.06.2017