அந்த மாபெரும் மௌனத்தை
எப்படியும் கலைத்துவிட வேண்டும்
கண்மூடித் திறக்கும்முன்
எங்கோ சென்றுவிட்ட காற்றினூடே
கிழ்த்துவீசப்பட்ட
காகிதங்களில் உணர்வுகளும்!
உண்மை போன்று
இல்லாதவொன்றை
எங்குதேடியும் கிடைக்கபெறாத
தருணத்தில் வென்றுவிட்டு
சென்ற பொய்மையினூடே
விலைகொடுத்து பெறப்பட்டதாய்
தோற்றங்கள்!
எங்கிருக்கிறேன் என்று
உணர்வதற்குள் உடலையே
மாற்றிவிடுவதாய் உலகம்
வலிமையிழந்து போகும்
வார்த்தைகளில் தோற்றுப்போகும்
உயிர்கள்!
இடம்தேடி அமர்வதற்குள்
ஆறடி நீளம்
மூன்றடி ஆழம்
இரண்டடி அகலம்
தருவதாய் நிர்பந்திக்கப்பட்டபோது
மற்றொருவருக்கு அடைக்கலமாய்
காலப்போக்கில் கடந்துபோனபோது
ஒருபடியளவில் உடலை
சாம்பலாய் கொடுத்துவிடுகிறது
விஞ்ஞானம்!
பிரகாசமாய் ஒளிரப்பட்ட
வெளிச்சம் கூட இறுகிப்போன
மனதினூடே இருட்டாகிப்போகின்றதாய்
மீண்டும் முயற்சிப்பதில்
கலைத்துவிட எத்தனித்த வேளையில்
வென்றுவிட்ட மௌனம்
வெளிப்படுத்துகிறது விசும்பலொன்றை!
கோவை சசிக்குமார்.