கணக்காய்வுச் சட்டவரைபை நாடா|ளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறாவிடின் சிறிலங்காவுக்கு வழங்கவுள்ள 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை நிறுத்தப்போவதாக உலகவங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 16ஆம் நாள் உலகவங்கி அதிகாரிகளுக்கும், நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் கணக்காய்வுத்திணைக்கள அதிகாரிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதன்போது கணக்காய்வு சட்டவரைபை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கமுடியாது என நிதிஅமைச்சின் அதிகாரியொருவரும் கணக்காய்வு அதிகாரி ஒருவரும் தெரிவித்திருந்தனர்.
இதைக்கேட்ட உலக வங்கி அதிகாரிகள் கோபமடைந்தனர். இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் நிதியமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த சட்டவரைவில் கொடுக்கப்பட்டுள்ள அதிக அதிகாரங்களால் பெரும்பாலான அமைச்சுக்களின் செயலர்கள் அதனை எதிர்ப்பதாகவும்இ நிதியமைச்சு அதிகாரி கூறினார்.
இருப்பினும், என்ன விலை கொடுத்தாயினும் குறித்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவேண்டுமென உலகவங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு சமர்ப்பிக்காவிட்டால் சிறிலங்காவுக்கு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்த 100மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கப்போவதில்லையெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்