வடக்கு மாகாண சபையின் நான்கு அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய ஏற்கனவே ஒரு குழு நியமிக்கபட்டிருந்த நிலையில் விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் மற்றும் கல்வித்துறை அமைச்சர் குருகுலராஜா மீதான விசாரணை அறிக்கை சமர்பிக்கப்பட்ட பின்னணியில் அந்த விசாரணை குழு பக்கசார்பாக இயங்கியமை தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டிருந்தது.
தற்சமயம் சுகாதார துறை அமைச்சர் சத்தியலிங்கம் மற்றும் மீன்வள துறை அமைச்சர் டெனிஸ்வரன் ஆகியோரை விசாரணை செய்வதற்க்கான குழுவில் மாற்றம் இடம்பெற்றுள்ளது.
வடமாகாண முதலமைச்சரால் நியமிக்கபட்டுள்ள நால்வர் அடங்கிய புதிய குழுவில் முதலமைச்சரால் முன்னதாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவுக்கு தலைமை தாங்கிய ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.தியாகேந்திரனே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய மூவரும் புதியவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் நியமிக்கபட்ட குழு சத்தியலிங்கத்துக்கும் டெனிஸ்வரணுக்கும் சார்பான முறையில் நடந்து கொண்டதை அடுத்தே இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் மீது முறைப்பாடு கொடுத்தவர்கள் விசாரணைக்கு வருகை தராத வகையில் சில நடவடிக்கைகள் மேட்கொள்ளப்பட்டதாலேயே இந்த புதிய விசாரணை குழு மூலம் இருவரும் விசாரணை செய்யப்படவுள்ளனர்.