காலத்துக்கு காலம் சர்வதேச அரங்கில் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தின் குரலை நசுக்க இலங்கை அரசாங்கம் கையாண்டு வரும் உத்தி தமிழர்களில் ஒருவரின் குரலை சர்வதேசத்தில் தமக்கு ஆதரவாக ஒலிக்க செய்வது தான்.
இந்த அடிப்படையில் முன்னாள் வெளிவிவகார அமைச்சராக விளங்கிய கதிர்காமர் சிறப்பாக செயலாற்றி விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தி வைத்திருந்தார்.
இவரின் மறைவுக்கு பின்னர் இலங்கை அரசின் தெரிவாக இருப்பவர் யாழ் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் எம் எ சுமந்திரன். தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் திட்டமிட்ட செயல்பாட்டின் மூலம் தமிழர் அரசியலில் நுழைக்கபட்ட சுமந்திரன் இன்று சர்வதேச அரங்கில் சிக்கலில் மாட்டி நிற்கும் இலங்கை அரசின் ஒவ்வொரு முடிச்சுக்களையும் சிறப்பாக அகற்றி வருகிறார்.
இறுதி யுத்தத்தில் இன அழிப்பு செய்த அரசை சர்வதேச அரங்கில் காப்பாற்றும் நடவடிக்கையாக ஜெனிவா கால அவகாசத்தை வழங்குவதில் கடும் பிரயத்தனத்துடன் செயலாற்றி அதில் வெற்றியும் கண்டார். இந்த சந்தர்ப்பங்களில் தமிழர்களின் உணர்வுக்கொந்தளிப்புகளுக்கு எதாவது ஒரு காரணத்தை கூறி சமாளித்து வந்த சுமந்திரனின் அரச இணக்கபாட்டின் முக மூடி மெதுவாக அகன்று வருகிறது.
அன்றைய காலம் தொடக்கம் புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு ,சிறுவர்களைப் படையில் சேர்த்தல், தற்கொலைத் தாக்குதல், மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தல் போன்ற சொற்பதங்கள் ஊடாகவே தமிழன பிரதிநிதிகளாக இருந்த விடுதலைப்புலிகள் சர்வதேசத்தின் முன் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டனர்.
இந்த சொற்பதங்களை பயன்படுத்துவதில் சுமந்திரன் எப்போதும் பின் நின்றதில்லை. ஆனால் தமிழ் மக்களை பொறுத்தவரை எப்போதும் தமது பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்ட விடுதலைப்புலிகளை சிறுமைப்படுத்தும் இத்தகைய செயல்பாடுகளை துரோக செயல்களாகவே கருதி கொள்வதுண்டு. இதன் விளைவு பற்றி தெளிவாக தெரிந்திருந்த சுமந்திரன் தனது பாராளுமன்ற உரையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் புலிகளையும் விசாரிக்க வேண்டும் என்னும் கருத்தை தெரிவிக்கும் முன் , இவ்வாறு கூறினால் தன்னை துரோகி என்று சொல்வார்கள் என தெரிவித்தமையானது , எந்தளவு அவர் மக்கள் உணர்வுகளை மதிக்கின்றார் என்கின்ற கேள்வியை எழுப்புகிறது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதி தன்னை தெரிவு செய்த மக்களின் கருத்தை பிரதிபலிக்க தவறி இன்னுமொரு இன மக்களை காக்க முற்படும் போது அவரை துரோகி என்று அழைப்பதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.
ஆரம்பத்தில் தனது செயல்ப்பாடுகளுக்கு நல்லிணக்கம் , மென்வலு சிந்தனை என்னும் விளக்கங்களை சுமந்திரன் கொடுத்து வந்ததால் மக்கள் அவற்றை சகித்து வந்தனர். ஆனால் தற்போது மீண்டும் மீண்டும் புலிகள் பற்றியும் போராட்டம் பற்றியும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறி வரும் சுமந்திரன் மீது மக்கள் கடும் விசனத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
சுமந்திரன் இல்லாத தமிழ் கூட்டமைப்பு மக்களின் எதிர்பார்ப்பாக மாறி வரும் நிலையில் இதன் விளைவு அடுத்த தேர்தலில் எவ்வாறு எதிரொலிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.