வாசகசாலை இலக்கிய அமைப்பு நடாத்தி வருகிற ஈழத்தமிழ் எழுத்தாளர் வரிசையில் ஜூன் 24-2017 அன்று எழுத்தாளர் தீபச்செல்வனின் “தமிழர் பூமி” கட்டுரைத் தொகுப்பு குறித்த அறிமுகக் கூட்டம் ஒன்றினை நடத்தினார்கள்.
தீபச்செல்வனின் எழுத்துலகப் பயணத்தில் இந்தக் கட்டுரைத் தொகுப்பு மிக முக்கியமானது. ஈழத்தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர், தமிழர்களின் பூமி சிங்களப் பேரினவாத சக்திகளால் எவ்வாறு ஆக்கிரமிக்கப்படுகிறது என்று மிகவிரிவாக எழுதியிருக்கிறார்.
மக்கள் நிலத்திற்காய் போராடும் ஒரு உக்கிரமான காலகட்டத்தில் இருக்கிறது இன்றைய ஈழம். தமது நிலங்களை இராணுவ முகாம்களாக அபகரித்து வைத்திருக்கும் சிங்கள பவுத்த ஆக்கிரமிப்புக்கு எதிராக ஈழத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் சாத்வீக வழியில் போராடி வென்ற செய்திகளை தீபச்செல்வன் இந்த நூலில் ஒரு வரலாறாகப் பதிவு செய்திருக்கிறார்.
இரத்தம் சொரிந்து அரசியல் வெளியில் திக்குத்தெரியாமல் நிற்கும் ஈழமக்களின் நிலங்களை புத்த சிலைகளின் மூலம் அபகரிக்கும் இன்னொரு வகையிலான இனப்படுகொலையை,அழித்தொழிப்பை தீபச்செல்வன் உலகுக்கு அடையாளம் காட்டிய நூலாக தமிழர் பூமி அமைந்திருக்கிறது.
வாசகசாலை இலக்கிய அமைப்பு இந்த நூலை பேசுபொருளாக மாற்றியிருக்கிறது. வடக்கு கிழக்கு பகுதிகளாக இருக்கும் தமிழர் பூமி முழுக்க பயணம் செய்து அங்குள்ள மக்களோடு உரையாடி எழுதப்பட்டிருக்கும் இந்த நூலின் அவசியம் ஈழ அரசியலுக்கு இன்றைக்கு அவசியமானது.
எதிர்காலத்தில் தமிழர் எதிர்கொள்ளப்போகிற பல்வேறு இன்னல்களை அது சுட்டிக்காட்டியிருக்கிறது. எனக்கு முன்னால் தோழர் வ. கீதா அவர்கள் உரையாற்றினார். அவர் பேசிய விடயங்களை அதன் சாராம்சத்தோடு நிகழ்வுக்கு தாமதமாகச் சென்ற எனக்கு கார்த்திகேயன் விவரித்தார். பொதுவாக தமிழகத்தின் இடதுசாரி அறிவுஜீவிகள் மத்தியில் நிலவும் ஈழம்பற்றிய விமர்சனங்களோடு தீபச்செல்வனின் இந்த நூலை அவர் அணுகியிருந்ததை உணரமுடிந்தது.
அ.மார்க்ஸ் வகையறாக்கள் பல்லு விளக்கும் போதே புலிகள் இஸ்லாமியர்களை யாழில் இருந்து வெளியேற்றினார்கள் என்று சொல்லுவதும், தமிழீழம் கிடைத்தால் வெள்ளாள அரசு தான் என்று தமிழகத்தில் சொல்லுவதும் ஒரு நாள்பட்ட வியாதி. ஆனால் வ. கீதா அவர்கள் மிகவும் பக்குவப்பட்ட வகையில் சில இடங்களைப் பேசினார்.
தமிழகத்தில் ஈழப் பிரச்சனை எவ்வாறு இத்தனையாண்டு காலமாக பேசப்படுகிறது, இந்திய கொள்கைவகுப்பாளர்கள் ஈழத்தைப் புரிந்து கொள்ளாத சில இடங்களில் அவர் மிகவும் தெளிவுகூர்ந்த உரையாடலை நிகழ்த்தினார். ஆனால் அவரின் உரையில் தீபச்செல்வன் வடக்கில் சைவைக் கோவில்கள் இடிக்கப்படுவதை மட்டுமே எழுதியிருக்கிறார். கிழக்கில் இருக்கும் சிறுதெய்வ வழிபாட்டைப் பற்றி எழுத முன்வரவில்லை. இது வடக்கின் மனம். அதையும் கடந்து சைவத்தை தூக்கிப்பிடிக்கும் தன்மை அவரின் இந்தத் தொகுப்பில் துலக்கமாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஈழத்தில் இருந்து எழுதுபவர்களை வெள்ளாளர், சைவ வைதீகம் என வட்டம் கட்டி நிறுக்கும் அறிவுஜீவித்தனம் குறித்து நான் கடுமையாகப் பல இடங்களில் கண்டித்திருக்கிறேன். இது இப்படியிருக்க நான் நேற்றைக்கு ஆற்றிய உரைக்குப் பின்னர் எழுப்பப்பட்ட கேள்விகள் மனமகிழ்வைத்தந்தன.
ஈழப் பிரச்சனையை பிரபாகரன் – மகிந்த என்கிற இருபெயர்களில் சுருக்குவதிலோ ஆதரவு – எதிர்ப்பு என்கிற நிலையில் நின்று பேசுவதிலோ இப்போது தீர்வில்லை. பாதிக்கப்பட்டிருக்கிற, ஆயுதங்களால் சுக்குநூறாகக் கொல்லப்பட்ட மக்களின் துயர் போக்க நடந்து முடிந்திருக்கிற அநீதிக்கு எதிராக நீதி வெல்ல மனிதர்கள் எல்லோரும் ஒன்றுசேரவேண்டும் என்று கூறினேன்.
ஏனெனில் முள்ளிவாய்க்காலில் தமிழர்களைக் கொன்ற குண்டுகள் பச்சை நிறத்திலும் இருந்தன, நீல நிறத்திலும் இருந்தன, சிவப்பு நிறத்திலும் இருந்தன. சித்தாந்தங்கள் யாவும், தர்ம போதனைகள் யாவும் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு படுகொலைக்களத்தை சந்தித்த மக்களின் நீதி கோருகிற ஜனநாயக வழிப்போராட்டம் ஈழத்தில் தோன்றியதன் சாட்சியாக தமிழர் பூமி வெளிவந்திருக்கிறது. அனைவரும் படிக்க வேண்டிய நூல்.
ஆனால் தமிழகத்தில் இந்த நூல் குறித்து உரையாடல்களை உருவாக்கவேண்டும். ஆனால் அதற்கான கள்ளமவுனம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் அந்த மவுனத்தின் மீது ஒரு பெரிய கூர்மையான கல்லைத்தூக்கி எறிந்திருக்கிறார்கள் வாசகசாலை இலக்கிய அமைப்பினர். அவர்களுக்கு நன்றிகள்…
-அகரமுதல்வன்
25.06.2017