1983ம் ஆண்டுக்கு முன்னரான காலப் பகுதியில் தையிட்டிப் பிரதேசத்தில் 20 பரப்புக் காணியில் விகாரை அமைந்திருந்ததாக வலி.வடக்குப் பிரதேச சபைத் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் காணியை தற்போது அடையாளப்படுத்தி அளவிடும் நடவடிக்கைகளே நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
1983ம் ஆண்டின் பின்னர் விகாரையை விட்டு பிக்குகள் இடம்பெயர்ந்து சென்றனர். அந்தக் காணியில் தமிழ் மக்கள் குடியமர்ந்தனர்.
அவர்கள், 1990ம் ஆண்டு போர் நடவடிக்கை காரணமாக இடம்பெயரும் வரையில் அந்தக் காணியிலேயே வாழ்ந்து வந்தனர். தையிட்டிப் பிரதேசம் அண்மையில் விடுவிக்கப்பட்டது.
விகாரைக் காணியில் முன்னர் தங்கியிருந்த 7 குடும்பங்கள் அந்தக் காணியில் மீளக்குடியமர்ந்திருந்தனர்.
இந்த நிலையில், விகாரை முன்னர் அமைந்திருந்தமைக்கான ஆவணம், காணி உறுதிப் பத்திரம் என்பவற்றுடன் விகாரைக்குச் சொந்தமான பிக்குகள், யாழ்ப்பாணத்திற்கு வந்து வலி. வடக்குப் பிரதேச செயலருடன் சந்தித்துப் பேசியிருந்தனர்.
விகாரைக்கான காணிக்கு அயலிலுள்ள காணி உரிமையாளர்களும் அழைக்கப்பட்டு, விகாரைக் காணி நேற்று அளவீடு செய்யப்பட்டுள்ளது.
அந்தக் காணியில் தங்கியுள்ள 7 குடும்பங்களுக்கும் தலா ஒரு பரப்பு நிலம் வீதமாவது வழங்குமாறு வலி.வடக்குப் பிரதேச செயலகத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.