ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ள நிலையில் அதனை முன்னிட்டு இன்று இரவு சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அனைத்து கட்சிகளும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும் பகுஜன் சமாஜ், காங்கிரஸ், இடதுசாரிகள், திரினாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அதனை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு”ஜி.எஸ்.டி வரி விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யவேண்டாம். இந்த வரி விதிப்பால் நாட்டின் பொருளாதாரம் உயரும். ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் எதிர்ப்புகளால் பணவீக்கம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
ஜி.எஸ்.டி குறித்து பொதுமக்கள் அஞ்சத் தேவையில்லை. தேவையற்ற வதந்திகளை நம்பவேண்டாம். முதலில் சிறிதளவு பாதிப்பு ஏற்பட்டாலும், நீண்ட காலத்துக்கு பயன்தரக் கூடியது என்பதால் வரி செலுத்துபவர்கள் கவலைப்பட தேவையில்லை” என குறிப்பிட்டுள்ளார்.